வழக்கறிஞர் படித்த ஒரு பட்டியலின இளைஞனை எவரும் உதவியாளராகச் சேர்த்துக் கொள்ளாததை தற்செயலாக அறிந்த சி.பி.ராமசாமி ஐயர், அவரை அழைத்து தன் உதவியாளராக நியமித்தார். தன் இல்லத்திலேயே தங்க வைத்தார். பின்னாளில் புகழ்பெற்ற நீதிபதியுமாக உயர்ந்த என்.சிவராஜ்தான் அந்த இளைஞர். வைக்கம் போராட்டத்தை காந்தியும், நாராயணகுருவும் முன்னெடுத்தபோது ஆலயங்களை அனைத்து ஜாதியினரும் வழிபடுவதற்காக திறந்துவிட வேண்டுமென்ற சட்ட முன்வரைவை உருவாக்கி திருவிதாங்கூர் மகாராஜாவை கையெழுத்திட வைத்தவர் அன்று திவானாக இருந்த சர்.சி.பி ராமசாமி ஐயர். முத்துலெட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவந்தபோது, அதற்கான சட்ட முன்வரைவை எழுதியளித்து, நிறைவேற்ற வைத்தார். மேட்டூர் அணை கட்ட முன் முயற்சி, பைக்காரா நீர்மின்சக்தி திட்டம், தமிழகத்தில் தூத்துக்குடி சென்னை துறைமுகங்களின் மேம்பாடு, பேச்சிப்பாறை நீர்மின் திட்டம், குளச்சல் உட்பட பல துறைமுகங்களின் விரிவாக்கம் என தேச உள்கட்டமைப்புக்கும் பெரிதும் பாடுபட்டவர் சி.பி.ராமசாமி ஐயர்.