நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் மேற்கு வங்க சட்ட அமைச்சர் மோலோய் கட்டக்கின் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொல்கத்தாவில் உள்ள வீடு மற்றும் பஷ்சிம் பர்தமான் மாவட்டம் அசன் சோல் நகரில் உள்ள 3 வீடுகளிலும் கொல்கத்தாவில் மேலும் 3 இடங்களில் சோதனை நடைபெற்றது. நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை ஏற்று ஒருமுறை மோலோய் கட்டக் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பிறகு அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அபிஷேக் பானர்ஜி மற்றும் சில திருணமூல் நிர்வாகிகளிடம் மத்திய விசாரணை ஏஜென்சிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளன. மாடு கடத்தல் ஊழலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திருணமூல் பிரமுகர் அனுப்ரதா மண்டல் கூட நிலக்கரி கடத்தல் ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சி.பி.ஐ அதிகாரி ஒருவர், “நிலக்கரி கடத்தல் ஊழலில் கட்டக் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன” என்று தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியும் கால்நடை கடத்தல் வழக்கில் திருணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அனுப்ரதா மோன்டலும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மமதாவின் வாரிசு மற்றும் மருமகன் அபிஷேக் பானர்ஜி, அவரது மனைவி ருஜிரா, அவரது சகோதரி மற்றும் மைத்துனர் ஆகியோர் மத்திய ஏஜென்சிகளின் கண்காணிப்பில் உள்ளனர். திருணமூல் மூத்த அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், (மறைந்த) சுப்ரதா முகர்ஜி, கட்சியின் மூத்த தலைவர்களான முகுல் ராய், சௌகதா ராய், பிரசூன் பானர்ஜி மற்றும் சுல்தான் அகமது ஆகியோர் நாரதா ஸ்டிங் ஆபரேஷனில் பணக்கட்டுகளை பெற்றுக்கொண்ட வீடியோவில் சிக்கியுள்ளனர். சாரதா சிட் ஃபண்ட் ஊழல் அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் மதன் மித்ரா, மக்களவை உறுப்பினர் சுதிப் பந்தோபாத்யாய் மற்றும் தபஸ் பால் உள்ளிட்ட சில முக்கிய திருணமூல் தலைவர்கள் சிக்கியுள்ளனர். இப்ப்டி, மேற்கு வங்கத்தில் பல்வேறு ஊழல்கள் தொடர்பான மத்திய அமைப்புகளின் விசாரணைகள் முடிவடையும் தருவாயில், சில வழக்குகள் நீதிமன்றங்களை எட்டியுள்ள நிலையில், மேலும் பலர் புதிய வழக்குகளில் சிக்கி வரும் நிலையில் திருணமூல் காங்கிரசின் பிரச்சனைகள் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கி கழுத்தை நெரிக்கத் தொடங்கியுள்ளன.