மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஃபைசன் கான் என்ற நபருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒரு ஹிந்துப் பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதற்காக முஸ்லிம் மதத்துக்கு மாறுமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், தாக்குதல் நடத்தியதாகவும் மனரீதியாக துன்புறுத்துவதாகவும் ஃபைசன் கான் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்தூர் கஜ்ரானா காவல் நிலையப் பொறுப்பாளர் தினேஷ் வர்மாவுன் கூற்றின் படி, ஃபைசன் 12ம் வகுப்பு வரை படித்தவர், வேலையில்லாதவர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண் உயர் படிப்புப் படித்தவர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பயிற்சி நிறுவனத்தில் படிக்கும்போது ஃபைசனை சந்தித்துள்ளார். அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 7 மாதங்களாக அந்த பெண்ணும் ஃபைசனும் லிவ் இன் உறவில் இருந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்வதற்காக முஸ்லிம் மதத்துக்கு மாறுமாறு வற்புறுத்தியுள்ளார் பைசன் கான். இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டாரிடம் கூறினால் தன் மீது அவர்கள் ஆத்திரமடைவார்கள் என அந்த பெண் பயத்துடன் அமைதியாக இருந்துள்ளார். இருவரும் உள்ளூர் திரையரங்கில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு வந்தனர். அதன் பின் மனதில் தைரியத்தை வரவழைத்து அந்த பெண் தனது காதலனிடம் சென்று தன்னால் மதம் மாற முடியாது என்று கூறியுள்ளார். பின்னர் அந்த நபருடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தைத் தொடர்ந்து அந்த பெண் இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளார். அனைத்து குற்றச்சாட்டுகளும் முழுமையாக விசாரிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.