ராம் கோபால் வர்மா மீது வழக்குப் பதிவு

பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராம்கோபால் வர்மா, சமீபத்தில் பா.ஜ.கவின் குடியரசுத் தலைவேர் வேட்பாளரும் பழங்குடியினத்தவருமான திரௌபதி மர்முவை குறித்து சர்ச்சைக்குரிய பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில்,  “திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால், பாண்டவர்கள் யார்? மேலும் முக்கியமாக, கௌரவர்கள் யார்?” என குறிப்பிட்டிருந்தார். அவரது ட்வீட் பலத்த சர்ச்சையை கிளப்பியது.  பா.ஜ.கவினர் மட்டுமில்லாமல் பொதுமக்களும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தெலுங்கானா பா.ஜ.க மூத்த உறுப்பினரான ஜி நாராயண் ரெட்டி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு மற்றொரு ட்வீட்டில், “இது ஒரு தீவிரமான முரண்பாடாகக் கூறப்பட்டது, வேறு எந்த வகையிலும் பார்க்கப்படவில்லை. மகாபாரதத்தில் திரௌபதி எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம், ஆனால் பெயர் மிகவும் அரிதானது என்பதால், நான் தொடர்புடைய கதாபாத்திரங்களை நினைவில் வைத்தேன், அதனால் என்னுடைய இந்த வெளிப்பாடு. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை.” என ஒரு குழப்பமான அறிக்கையை வெளியிட்டார். எனினும், சர்ச்சை தணியாததால், கோபமடைந்த ராம்கோபால் வர்மா, திரௌபதி மர்மு மற்றும் பா.ஜ.கவுக்கு எதிராக மேலும் நையாண்டி ட்வீட்களை வெளியிட்டார். இதையடுத்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக ராம் கோபால் வர்மாவுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் லக்னோவில் புதிதாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.