எம்.பி மீது வழக்குப் பதிவு

என்னைப் பொருத்த வரை மாமிசம் சாப்பிடுவர், மதுவை ஏற்றுக் கொள்பவர்தான் பெண் கடவுள் காளி என்று ‘காளி’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லீலா மணிமேகலைக்கு திருணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆதரவு குரல் கொடுத்து இருந்தார். இவரது கருத்தை பலரும் கண்டித்தனர். இவரது கருத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்த பா.ஜ.க தலைவர் ரதிந்திர போஸ், ”மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜிதான் பதில் அளிக்க வேண்டும். இது முதல் முறையல்ல. இதுபோன்ற முன்பும் திருணமூல் கட்சியினர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்” என்று கண்டித்திருந்தார். இதையடுத்து, ‘மஹுவா மொய்த்ராவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, இது கட்சியின் கருத்து இல்லை’ என்றும் திருணமூல் கட்சி தெரிவித்து இருந்தது. அதைத்தொடர்ந்து கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்வதை மஹுவா மொய்த்ரா நிறுத்திக் கொண்டார். ஆனால், முதல்வர் மமதா பானர்ஜியை டுவிட்டரில் பின் தொடர்கிறார். இந்நிலையில், மஹுவா மொய்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தி இருப்பதாகக் கூறி, பா.ஜ.க தலைவர் சித்தன் சாட்டர்ஜி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிந்து மத உணர்வுகள் புண்பட்டுள்ளதாகவும், ஹிந்து தெய்வங்களை அவமதிப்பதை எக்காரணம் கொண்டும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.