ஆ.ராசா மீது நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை பெரியார் திடலில் கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, ஹிந்து மதம் குறித்தும் ஹிந்து பெண்கள் குறித்தும் அவதூறாகப் பேசியிருந்தார். இது பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. இந்த சூழலில், ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் பி.ஏ.ஜோசப் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “ஆ.ராசாவின் பேச்சு மதங்களுக்கு இடையே விரோதத்தை ஏற்படுத்தி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ராசாவின் பேச்சால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தில் இல்லாத மனுநீதி நூல் குறித்து பேசி, தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தியுள்ளார். ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அவர் ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பதால், புகாரை காவல்துறையினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார். இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.