தேசம் முழுவதும் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பத்ரிநாத், ஜெகந்நாத் பூரி, ராமேஸ்வரம், துவாரகாதிஷ் உள்ளிட்ட புனித சுற்றுலாத் தலங்களை மக்கள் சென்று தரிசிக்க ஏதுவாக, சார்தாம் யாத்திரையை நடத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
ராமாயண தலங்களை தரிசிக்கும் “ஸ்ரீ ராமாயண யாத்திரை” மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி இந்த யாத்திரையை, ‘தேகோ அப்னா தேஷ்’ என்ற டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் மூலம் நடத்தவிருக்கிறது. இந்த 16 நாள் சுற்றுலா, செப்டம்பர் 18, 2021 அன்று டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி, சுமார் 8,500 கிலோமீட்டர் பயணிக்கும்.
அதில், பத்ரிநாத், மனா கிராமம் (சீன எல்லைக்கு அருகில்), நரசிங்கா கோயில் (ஜோஷிமட்), ரிஷிகேஷ், ஜகந்நாத் பூரி, பூரியின் கோல்டன் பீச், கொனார்க் சூரியக் கோயில், சந்திரபாகா கடற்கரை, தனுஷ்கோடி, ராமேஸ்வரம், நாகேஸ்வர் ஜோதிர்லிங்கா உள்ளிட்ட துவாரகாதிஷ், சிவராஜ்பூர் கடற்கரை, பேட் துவாரகா என பல இடங்களும் சுற்றி கண்பிக்கப்படும்.
இந்த டீலக்ஸ் ஏசி டூரிஸ்ட் ரயிலில் இரண்டு உணவு விடுதிகள், நவீன சமையலறை, ஷவர் க்யூபிகல்ஸ், முதல் வகுப்பு, இரண்டாவது வகுப்பு ஏ.சி, கால் மசாஜர், சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு காவலர்கள் என பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் உள்ளன.
156 பேர் பயணிக்கும் திறன் கொண்ட பெட்டிகளில் சுமார் 120 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு, முகக்கவசங்கள், கை கையுறைகள், சானிட்டைசர் பயணிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படும். பயணத் தொகையாக ஒருவருக்கு 78,585 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.