குழந்தை நல மருத்துவரும், உணவு ஆர்வலருமான டாக்டர் சுரேஷ் குமார் எழுதி, இண்டஸ் ஸ்க்ரோல்ஸ் பிரஸ் வெளியிட்ட ‘ஃபாஸ்ட் ஃபுட்: தி லூர் அண்ட் தி ட்ராப் – கேன் இந்தியா இட்ஸ் யூத் சேவ் இட்ஸ்’ என்ற புத்தகத்தை டெல்லியில் வெளியிட்டு பேசிய மத்திய வெளியுறவு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் வி.முரளீதரன், “துரித உணவுப் பொருட்களை உட்கொள்வதால் கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால், நாட்டில் துரித உணவுக்கு எதிராக ஒருங்கிணைந்த மற்றும் விரிவான பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்” என கூறினார். மேலும், இந்நிகழ்ச்சியில் ‘ஃபாஸ்ட் ஃபுட் ஃப்ரீ இந்தியா’ பிரச்சாரத்தையும் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும் உணவு இறையாண்மை ஆர்வலருமான டாக்டர் வந்தனா சிவா, “மக்களின் உணவுப் பழக்கங்களில் பெருநிறுவனங்கள் மாற்றங்களைத் தூண்டி வருகின்றன. பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம், பெருநிறுவனங்கள் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை மக்களிடம் தள்ளுகின்றன, உணவு பதப்படுத்துதல் மிகப்பெரிய அளவில் உணவுப் பொருட்களின் தரத்தை இழக்க காரணமாகிறது” என கூறினார்.
விஞ்ஞான் பாரதியின் தேசிய அமைப்புச் செயலாளர் ஜெயந்த் சஹஸ்ரபுத்தே, இதுபோன்ற முக்கியமான தலைப்பை பொதுமக்கள் முன் எடுத்துச் சென்ற எழுத்தாளர் மற்றும் வெளியீட்டாளர்களை வாழ்த்தினார். பர்யாவரன் சன்ரக்ஷன் கதிவிதியின் (சுற்றுச்சூழல் அமைப்பு) தேசிய ஒருங்கிணைப்பாளர் கோபால் ஆர்யா, துரித உணவுக்கு அடிமையாவதால் மனிதர்களின் உணவை செறிக்கும் திறன் பாதிக்கப்படுகிறது என கூறினார்.