கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஹிந்து மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், “என்னை ஹிந்து என்று அழைப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன். ஹிந்து என்று கூறுவதே தவறு என்று மக்கள் நினைக்கும் வகையில் மாநிலத்தில் மிகப்பெரிய சதி நடந்து வருகிறது. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் சையத் அகமது கான், ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே தான் ஒரு ஹிந்து என்று அழைக்கப்படுவதையே விரும்பினார். தற்போது அதனை இங்கு எடுத்துக்காட்ட வேண்டியு சூழல் ஏற்பட்டுள்ளது. ஹிந்து என்பது புவியியல் ரீதியான சொல். பாரதத்தில் பிறந்தவர்கள், இங்கு விளையும் உணவை உண்டு வாழ்பவர்கள், இந்திய நதிகளின் நீரை பருகுபவர்கள் அனைவருமே ஹிந்துக்கள் என்று அழைத்துக் கொள்ள தகுதியுடையவர்களே. எனவே, ஹிந்து என்பதை நாம் இங்கு மதச் சொல்லாக பிரித்துப் பார்க்கக் கூடாது. அந்த வகையில் ஆர்ய சமாஜ உறுப்பினராகிய நீங்கள் ஏன் என்னை ஹிந்து என்று அழைக்கவில்லை என்பதே எனது வருத்தமாக உள்ளது. அப்படி அழைப்பதால் தவறு எதுவும் இல்லை. அழைக்காமல் இருப்பதுதான் தவறு” என கூறினார்.