அக்னிபத் திட்டம் அமைச்சரவை ஒப்புதல்

நாட்டின் ஆயுதப்படைகளில் இளைஞர்களை பணியமர்த்தும் கவர்ச்சிகரமான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. அக்னிபத் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தின்கீழ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். தேசபக்தியுடன், துடிப்புமிக்க இளைஞர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டு காலத்திற்கு பணியாற்ற அக்னிபத் அனுமதிக்கும். சமுதாயத்திலிருந்து சமகால தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ற வகையில் திறமைமிக்க இளைஞர்களை சீருடைப் பணிக்கு ஈர்க்க இது வாய்ப்புகளை வழங்கும். இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, மாதாந்திர ஊதியமாக முதல் ஆண்டில் ரூ. 30,000, 2ம் ஆண்டில் ரூ. 33,000, 3ம் ஆண்டில் ரூ. 36,500, 4ம் ஆண்டில் ரூ. 40,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் பங்களிப்புத் தொகையாகப் பிடிக்கப்படும்.  எஞ்சிய 7 சதவீதம் கைகளில் வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தொகுப்பு நிதியில் செலுத்தப்பட்ட ரூ. 5. 02 லட்சம் மற்றும் அரசு அளிக்கும் அதே தொகை சேர்த்து வட்டியுடன் சேவா நிதியாக ரூ. 11.71 லட்சம் வீரர்களுக்கு வழங்கப்படும். இதற்கு வருமான வரி விலக்கு உண்டு. இதைத்தவிர பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய பயன்கள் அளிக்கப்பட மாட்டாது. அக்னி வீரர்களுக்கு பங்களிப்பு அல்லாத ஆயுள் காப்பீடு ரூ. 48 லட்சத்துக்கு வழங்கப்படும். அக்னிபத் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டு 46,000 பேர் பணியில் சேர்க்கப்படுவார்கள். இதற்கான வயது வரம்பு 17.5 வயது முதல் 21 வயது.