பை அப்ராக்ஸிமேஷன் டே

பை (π) என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்று. ஒரு வட்டத்தின் சுற்றளவு (பரிதி), அதன் விட்டத்தைப்போல பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159. பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். பை அறிவியலிலும் பொறியியல் துறையிலும் அதிகம் பயன்படுவதால், இதனைக் கணிக்க பல சமன்பாடுகளும் தோராயமாக கணக்கிடும் முறைகளும் உண்டு.

கி.பி.400-500 ஆண்டுகளில் வாழ்ந்த இந்திய அறிஞர் ஆரியபட்டாவால் கணக்கிட்ட ‘பை’யின் அளவு மிகத் துல்லியமானது. கிரேக்கர்கள் வட்டத்தின் சுற்றளவை குறிக்க பெரிமீட்டர் என்னும் சொல்லை கையாள்வதால் அதன் முதல் எழுத்தாகிய பை (π) யைப் பயன்படுத்தினர். இன்றும் அனைத்து மொழிகளிலும் இவ்வெழுத்தே ‘பை’யைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

‘பை’ நாள் என்னும் புகழ்பெற்ற கணித மாறிலி பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஐரோப்பிய நாடுகளில் இன்று ‘பை அப்ராக்ஸிமேஷன் டே’ என கொண்டாடப்படுகிறது. பை அளவின் பின்னத்தை குறிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும் விதமாக உலக ‘பை’ தினம் கொண்டாடப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 ல் பையின் பொதுவான பின்ன அளவான 22/7 என்பதை குறிக்கும் வகையில் இது ‘பை அப்ராக்ஸிமேஷன் டே’  என கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத் தவிர சில இடங்களில் நவம்பர் 10 (ஆண்டின் 314வது நாள்) சீனாவின் பின்ன அளவின்படி (355/113) போன்ற நாட்களும் ‘பை’ தினமாக கொண்டாடப்படுகிறது. பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் “பை” எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்க முடியாது.

ஜெ. பிரேம குமாரி