ஹிந்து மத நூல்கள் எரிப்பு

ராஜஸ்தானின் பகசார்பகுதியில், கடந்த டிசம்பர் 25 அன்று, வழக்கறிஞர்களான அம்ரித் தாண்டே, பந்த் காஷ்யப் மற்றும் அவர்களது அவர்களது கூட்டாளிகள் இணைந்து சம்தா சைனிக் தளம் என்ற அமைப்பின் சார்பாக ஹிந்துக்களை புத்த மதத்திற்கு மாற்றும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அந்த நிகழ்வின் போது, ஹிந்துமத புனித நூல்களின் பக்கங்கள் எரிக்கப்பட்டதாகவும், எரிக்கப்பட்ட காகிதங்களை காலில் நசுக்கியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை பார்த்த ஹிந்து சமூகத்தினர் ஒன்று திரண்டு இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பகசார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பீம் ஆர்மி அமைப்பின் உறுப்பினர்களான அஜ்மல், அம்ரித்லால் மற்றும் அர்ஜுன்சிங் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க சமூக விரோதிகள் முயற்சிப்பதாக ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர். மக்கள் புத்த மதத்திற்கு மாறுவதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ஹிந்து புனித நூல்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். பகாசர் பகுதி அண்டை நாடான பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கிய இடம் என்பது குறிப்பிடத்தக்கது.