பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தில் கிறிஸ்தவ சர்ச்- கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்களை மிரட்டும் காவல்துறையினர் அராஜகம் ஹிந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஹிந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் அறிக்கை: தென்காசி மாவட்டம் வி.கே.புதூர் தாலுகா அச்சங்குன்றம் கிராமத்தில் TDTA கிறிஸ்தவ பள்ளி இயங்கி வந்த நிலையில் அந்தப் பள்ளிக்கூடம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் திமுக ஆட்சி அமைந்தவுடன் பல ஆண்டுகளாக பழைய பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த இடத்தை தென்காசி மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் திடீரென இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருத்தம் செய்து அங்கு கிறிஸ்தவ சர்ச் என்று பதிவு செய்துள்ளனர்.
கடந்த 25.3.2023 அன்று திடீரென எந்தவித அனுமதியும் பெறாமல் நடைபெற்ற சர்ச் கட்டுமான பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர் மக்களை காவல்துறையினர் மூலம் கைது செய்து ஒரு கோவில் வளாகத்தில் மாலை வரை அடைத்து வைத்திருந்தனர். ஊர் மக்கள் அனைவரும் 3.4.2023-ல் தங்கள் ஊருக்கு TDTA கிறிஸ்தவ பள்ளி வேண்டாம் எனவும் தனியாக அரசுப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதன்படி 14.4.2023 அன்று TDTA பள்ளியில் படித்த மாணவர்கள் வேறு அரசு பள்ளிக்கூடத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் அச்சங்குன்றம் பகுதியில் பள்ளிக்கூடம் அமைக்க தேவையான இடத்தை ஊர் மக்கள் தமிழக ஆளுநர் பெயரில் பத்திர பதிவு செய்து வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் ஊரில் பள்ளிக்கூடம் அமைக்கும் பணியை தொடங்க வேண்டி அச்சங்குன்றம் கிராம மக்களும், குழந்தைகளும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முடிவு செய்தனர். ஆனால் சிறுபான்மையினர் நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் தூண்டுதல் காரணமாக அச்சங்குன்றம் ஊர் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி காவல்துறையினர் மூலம் தடுக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமையாகும் அதனை தடுக்கும் விதத்தில் செயல்படும் தென்காசி மாவட்டம் ஆட்சியரையும், காவல்துறையினரையும் ஹிந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் தேசிய குழந்தைகள் ஆணையம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹிந்துமுன்னணி வலியுறுத்துகிறது.