பள்ளி கட்டடங்களை விரைவாக கட்டுங்கள்

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பள்ளி கூட கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் காரணமாக பல மாவட்டங்களில் மிகவும் பலவீனமாக உள்ள பள்ளிக்கூட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஆனால் இடிக்கப்பட்ட பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் உடனடியாக கட்டித்தரப்படாத காரணத்தால், மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால், அருகில் உள்ள கோயில்கள், சைக்கிள் ஸ்டாண்டு, மர நிழல் என பல்வேறு இடங்களில் கல்வி பயில வேண்டியிருக்கிறது. அவ்வகையில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் கடந்த ஆண்டு முழுமையாக இடிக்கப்பட்டது. ஆனால் அரசு புதிய கட்டடத்தை கட்டித்தரவில்லை. ஒரு தனியார் தொண்டு நிறுவனம் புதிதாக இரண்டு கட்டடங்களை கட்டிக் கொடுத்தது. இந்தப் பள்ளியில் சுமார் 750 மாணவ மாணவிகள் படிப்பதால் இது போதுமானதாக இல்லை. இதனால் மாணவர்கள் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலிலும் சமுதாய கூடங்களிலும் தற்போது கல்வி பயின்று வருகிறார்கள். இதற்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காணுமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசு பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்களின் சேர்க்கை தேவை என கூறும் அரசு, அதற்கு முதலில் அதிகப்படியான பள்ளி கட்டடங்களை தரமாக, நவீனமாக, வசதிகளுடன் கூடியதாக கட்ட வேண்டும் என்பதை உணர வேண்டும்.