கேரள காவல்துறையின் கொடூரம்

கேரள காவல்துறையினர், ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் நாயக்காக பணிபுரியும் கிரண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லத்தில் உள்ள அவர்களது வீட்டில் காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். தகவலின்படி, இரவு 8 மணியளவில் கிரண்குமாரின் வீட்டிற்கு வந்த காவலர்கள், அவரது தாயார் முன்னிலையில் அவரை அடித்தனர். சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள இந்த சம்பவத்தின் காட்சிகள், கிரண்குமாரை தரையில் இழுத்துச் செல்வதையும், அவரது உடலின் மீது ஏறி மூன்று காவலர்கள் அமர்ந்து அவரை அடிப்பதையும் காட்டுகிறது. இதுகுறித்து கிரணின் மனைவி கூறுகையில், காவலர்கள் தங்கள் வீட்டிற்கு வந்து, உடனடியாக கிரண்குமாரை அழைக்கச் சொல்லி உள்ளே புகுந்தனர். அவர்களின் ஆக்ரோஷமான நடத்தையை அறியாத கிரண் அவர்களுடன் செல்ல மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் காவலர்கள் தங்களது பலத்தை பயன்படுத்தி கிரண்குமாரையும் அவரது தாயையும் கொடூரமாக தாக்கினர். ஒரு பொது விவகாரம் தொடர்பாக கிரண்குமாரின் தந்தை புகார் அளித்தும், காவல்துறை அலட்சியப்படுத்தியதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. எதிர் கோஷ்டியினர் புகாரின் பேரில் வீட்டுக்கு வந்த காவலர்கள், கிரண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியுள்ளனர். கடைசியாக கிரணின் கை, கால்களை பெட்ஷீட் மற்றும் துணியால் கட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். கிரண்குமாரின் குழந்தைகள் கண்முன்னேயேகாவலர்கள் இந்த கொடூரத்தை அரங்கேற்றினர். இந்த சம்பவத்தால் குழந்தைகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேரள காவல்துறை இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.