18 நாளில் இடிந்த பாலம்

தி.மு.க பதவியேற்றது முதல், வெங்காய சருகு போல பெயர்ந்து வரும் சாலைகள், உதிரும் சுவர்கள், இணைப்பில்லாத குடிநீர் குழாய், ஒரே அறையில் 2 கழிப்பறைகள், வாகனங்கள், அடிப்பம்புகளை அகற்றாமலேயே போடப்படும் சாலைகள், மின்சார கம்பங்களை அகற்றாமலேயே போடப்படும் மழை நீர் வடிகால்கள் என அக்கட்சியின் ஒப்பந்ததாரர்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை. ஏறக்குறைய தமிழகம் முழுவதும் இதே நிலை தான் நிலவுகிறது. இந்த சூழலில் இதேபோன்ற மற்றொரு நிகழ்வாக, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள சிராஜூதீன் நகரில் ஆதாம் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் இருந்த தரைப்பாலம் மிகவும் பழுதடைந்ததாகக் கூறி, ரூ. 2.40 லட்சம் மதிப்பில் கடந்த 18 நாட்களுக்கு முன்பு புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன், வெறும் 3 யூனிட் மணல் ஏற்றிச்சென்ற லாரி அந்தப்பாலம் வழியாக சென்றபோது திடீரென பாலம் இடிந்தது. இதில் லாரியின் பின்பகுதி வாய்க்காலுக்குள் சிக்கிக் கொண்டது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ‘பாலம் கட்டும்போதே பணிகள் முறையாக நடைபெறவில்லை’ என்று ஒப்பந்ததாரரிடம் அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாலம் இன்னும் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி விட்டு தடையை மீறிச் சென்றதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று மேயர் சண். ராமநாதன் கூறியுள்ளார்.