வேலைக்கு லஞ்சம்; லாலு குடும்பம் மீது குற்றப் பத்திரிகை

கடந்த 2004 முதல் -2009 வரை, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது தன் அதிகாரத்தை பயன்படுத்தி, ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் நிலத்தை லஞ்சமாக பெற்றார். இது குறித்து, சி.பி.ஐ.,- அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும், பீஹார் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவி, அவரது மகனும், பீஹார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரிடம் பல முறை விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில், புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், இரண்டாவது குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று தாக்கல் செய்தனர். அதில், லாலு பிரசாத், ரப்ரி தேவி, தேஜஸ்வி உட்பட 14 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதில், ஏ.கே., இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனம் உட்பட பல இடைத்தரகர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இது, லாலு குடும்பத்தினருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.