கட்டுமானம், ஆடை உற்பத்தி, பூஜாரிகள், மீன்பிடித்தல், தெருவோர விற்பனை, வீட்டு வேலை, விவசாயம் தொடர்புடைய பணிகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக மத்திய அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை அவர்கள் பெற ஏதுவாக அவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய இ-ஷ்ரம் என்ற இலவச இணையதள பதிவு திட்டத்தை மத்திய அரசு சயல்படுத்தி வருகிறது. இதில் தற்போது 1 கோடிக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 43 சதவீதம் பேர் பெண்கள், 57 சதவீதம் ஆண்கள்.
2019-20 பொருளாதார கணக்கெடுப்பின்படி, நாட்டில் 38 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இவர்கள் அனைவரையும் இந்த ஆண்டுக்குள் இணையதள பதிவில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இந்த பதிவில் பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான பதிவுகளுடன் முன்னணியில் உள்ளன. இ-ஷ்ரம் இணையத்தில் பதிவு செய்த அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பிரத்தியேக எண்ணுடன் கூடிய இ ஷ்ரம் அடையாள அட்டை வழங்கப்படும். இதில் பதிவு செய்த தொழிலாளி விபத்தில் சிக்கினால், இறப்பு அல்லது நிரந்தர ஊனமுற்றால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் உதவி, பகுதி குறைபாடுகளுக்கு ரூ. 1 லட்சம் உதவி போன்ற பல்வேறு சலுகைகளும் கிடைக்கும்.