பாகிஸ்தான் தற்போது பெரிய அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. விரைவில் மின்சார பற்றாக்குறையும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ள பாகிஸ்தான், சௌதி அரேபியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியுடன் (ஐ.டி.பி) புதிதாக 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த வங்கிக் கடன், கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்கள், இயற்கை எரிவாயு மற்றும் தொழில்துறை ரசாயன யூரியா ஆகியவற்றிற்கு மூன்று ஆண்டுகளுக்கு பணம் செலுத்த பயன்படும் என்று ஆசியா டைம்ஸ் தெரிவித்துள்ளது. பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.