நாகலாந்தின் டெனிங்கில் இருந்து மிக அதிக காரம் கொண்ட மிளகாயான பூட் ஜோலோகியா என்ற மிளகாய் வகை முதன்முறையாக இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு மோடி பாராட்டுத் தெரிவித்தார். அவரது டுவிட்டர் பதிவில் “அற்புதமான செய்தி. பூட் ஜோலோகியாவை சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே அது எவ்வளவு காரமானது என்று தெரியும்! இது ராஜா மிர்ச்சா அல்லது மிளகாய் அரசன் என்று அழைக்கப்படும் நாக மிளகாய் பற்றியது! இது உண்மையில் மிகவும் காரமானது, தனித்துவ வாசனை கொண்டது என” கூறியுள்ளார். இந்த மிளகாய்க்கு புவிசார் குறியீடு கடந்த 2008ல் வழங்கப்பட்டது. சில வருடங்களுக்கு முன்பு பூட் ஜோலோகியா மிளகாய் ஜப்பானில் ஒரு கிலோவுக்கு ரூ .50,000 க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மிளகாயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று வடகிழக்குப் பகுதி மக்கள் நம்புகின்றனர். மேலும், நாகாலாந்தில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட அன்னாசிப்பழம், நாகா கிவி, இஞ்சி, பெரிய ஏலக்காய் போன்ற பொருட்களுக்கு ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பிய சந்தைகளில் அதிக தேவை இருப்பதாக நாகாலாந்து அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.