பி.எம் யசஸ்வி திட்டம்

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முன்முயற்சியான ‘பி.எம் யசஸ்வி யோஜனா’ என்ற திட்டத்தை குஜராத் அரசு தொடங்கியுள்ளது. இவ்விழாவில் பேசிய முதல்வர் பூபேந்திர படேல், ‘மாநிலம் மற்றும் நாட்டிலுள்ள லட்சக்கணக்கான மாணவர்களின் முறையான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி மற்றும் மாணவர்களின் நலனுக்காக ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த புதிய பிரதமர் யசஸ்வி யோஜனா, ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற கனவை நனவாக்க உதவும். சமூகம் மற்றும் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மட்டுமே நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் திறன் பெறும். இந்தத் திட்டம் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிப்பதுடன், திறன் மேம்பாட்டின் மூலமும் அவர்களை வலுப்படுத்தும். இதனால், அவர்கள் முதலாளிகளாக மாறமுடியும். இத்திட்டம் 2022ம் ஆண்டு முதல் 2026 ம் ஆண்டு வரை மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீத பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். “இரட்டை இயந்திர அரசாங்கத்தின் இரட்டை நன்மைகள்” மூலம் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் தன்னம்பிக்கை கொண்ட குஜராத்திலிருந்து தன்னிறைவு பெற்ற பாரதம் என்ற இலக்கை அடைய குஜராத் மகத்தான பங்களிப்பை வழங்கும்’ என தெரிவித்தார்.