ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் ஈத் தொழுகை நடைபெற்றபோது, அதன் அருகில் தலிபான் பயங்கரவாதிகள் செலுத்திய ராக்கெட் வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், தொழுகை தடையின்றி நடைபெற்றது. இதில், அதிபர் அஷ்ரப் கானியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், உரையாற்றிய அதிபர், ஆப்கானிஸ்தானின் எதிர்காலம் ஆப்கானியர்களால் தீர்மானிக்கப்படுகிறது. ஆப்கானியர்கள் தாங்கள் ஒன்றுபட்டவர்கள் என்பதை செயலில் நிரூபிக்க வேண்டும். அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மக்களின் உறுதியான நிலைப்பாடு நிலைமையை மாற்றிவிடும். ஆப்கானியர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தலிபான்களிடம் ஏதேனும் ‘நேர்மறையான பதில்’ இருக்கிறதா? என பேசினார். முந்தைய ஆண்டுகளில், ஈத் விடுமுறையின் போது தலிபான்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அத்தகைய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.