கொரோனா பாதித்தவர்களை தாக்கும் ஒருவகை ‘கரும்பூஞ்சை’ நோய் குறித்து தற்போது பொதுமக்களிடம் தேவையற்ற ஒரு பயம் பரவி வருகிறது. இந்நிலையில், சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தனியார் மருத்துவமனைகளில் கரும்பூஞ்சை நோய் கண்டறியப்பட்டால், அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். ‘கரும்பூஞ்சை நோய்’ அறிவிக்கப்பட வேண்டிய நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கரும்பூஞ்சை நோயானது முழுமையாக குணப்படுத்தக்கூடியதுதான். இதனால் தேவையற்ற பயமோ, பதற்றமோ வேண்டாம். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 9 பேரும் நலமுடன் உள்ளனர். ஸ்டீராய்டு மருந்து எடுப்பவர்களுக்கும் இது போன்ற தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கரும்பூஞ்சை பரவல் குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் 2 வாரங்கள் பின்தங்கி உள்ளதால் தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளது. மக்கள் நோய்க்கட்டுப்பாட்டு பகுதியை மதித்து, அங்கு யாரும் செல்லவோ, அங்கிருந்து வெளிவரவோ கூடாது. நோய் கண்டறியப்பட்ட உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள். முழு ஊரடங்கை மக்கள் மதித்து நடக்க வேண்டும். அப்படி நாம் பொறுப்புடன் நடந்துகொண்டால் மட்டுமே நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும்’ என தெரிவித்தார்.