பா.ஜ.க தொண்டர் கொலை

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஜூலை 26 அன்று, பாரதிய ஜனதா கட்சியின் யுவமோர்ச்சா தொண்டரான பிரவீன் நெட்டாரு அடையாளம் தெரியாத ஆசாமிகளால் வெட்டிக் கொல்லப்பட்டார். கோழி வியாபாரம் செய்து வந்த நெட்டாரு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், நெட்டாருவை கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொன்றனர். தாக்குதலுக்குப் பிறகு அவர்கள் தப்பியோடிவிட்டனர். நெட்டாருவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. கேரளா பதிவு எண்ணைக் கொண்ட இருசக்கர வாகனத்தில் கொலையாளிகள் வந்ததை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக மனோரமா ஆன்லைனில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் நடந்த இடம் கேரள எல்லைக்கு அருகில் உள்ளது என்பதும் இதில் கவனத்தில் கொள்ளத்தக்கது. கர்நாடகா காவல்துறையினர் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரவீன் நெட்டாரு மரணத்திற்கு நீதி கோரி பெல்லாரி மற்றும் புத்தூரில் பா.ஜக.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நெட்டாருவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, இந்த விவகாரத்தில் விரைவில் நியாயம் கிடைக்கும், இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார். இதனிடையே நேற்று நல்லடக்கத்திற்காக பிரவீன் நெட்டாருவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள், ஹிந்து அமைப்பினர், பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சமீப காலமாக, முஸ்லிம்கள் கர்நாடகாவில் பல ஹிந்து அமைப்பினரை தாக்கி வருவதும் கொன்றுள்ளதும் இங்கு நினைவு கூரத்தக்கது.