மஹாராஷ்டிராவில் ஆறு எம்.எல்.சி., உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தலில், பா.ஜ.,வினர் நான்கு பேர் வெற்றி பெற்றுள்ளனர். ‘எந்த தேர்தல் நடந்தாலும் எங்களுக்கு வெற்றி தான் என கூறி வந்த ஆளும் கட்சி கூட்டணிக்கு, இத்தோல்வி ஒரு துவக்கம் மட்டுமே’ என, பா.ஜ.கவை சேர்ந்த மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்து உள்ளார். இத்தேர்தலில் கவனிக்கத்தக்கதாக இருந்தது நாக்பூர் தொகுதி. பா.ஜ.கவில் இருந்து விலகிய ரவீந்திர சோட்டு போயரை வேட்பாளராக நிறுத்தி பா.ஜ.க ஓட்டுக்களை பிரித்து வெற்றிபெறலாம் என எண்ணி காங்கிரஸ் செயல்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு ஓட்டளிக்க மாட்டோம் என காங்கிரஸ், அதன் கூட்டணி கட்சியினர் கொடி பிடிக்கவே, வேறு வழியின்றி சுயேச்சை வேட்பாளர் மங்கேஷ் தேஷ்முக்கை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ். தேர்தல் முடிவில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் இணையமைச்சர் சந்திரசேகர் பவான்குலி வெற்றி பெற்றார். மங்கேஷ் தேஷ்முக்கிற்கு கிடைத்தது 44 ஓட்டுகள் மட்டுமே, தனித்து நின்ற ரவீந்திர சோட்டு போயருக்கு கிடைத்தது ஒரு ஓட்டு மட்டுமே.