பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பாரதத்தின் 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவை ஒட்டி பா.ஜ.க சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் மரியாதை செலுத்துவது, தியாகிகளை சந்தித்து கௌரவிப்பது உள்ளிட்டவற்றில் பா.ஜ.க ஈடுபட்டது. அவ்வகையில், கடந்த 11ம் தேதி காவல்துறை அனுமதிபெற்று, தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா நினைவு மணிமண்டப வளாகத்தில் உள்ள பாரத மாதா ஆலயத்தில் மரியாதை செலுத்தச் சென்றோம். அப்போது ஆலயத்தை திறக்க மறுத்தனர். எனவே, அவர்களை மீறி உள்ளே சென்று மரியாதை செய்தோம். பாரத தேசம் உள்ளவரை ‘பாரத மாதா’ என்பவர் என்றென்றும் இந்த மண்ணில் வாழக் கூடிய சாகாவரம் பெற்றவர். இந்த தேசத்தில் வாழும் அனைவருக்கும் அவர் கடவுள். அவருக்கு அமைக்கப்பட்ட ஆலயத்திற்கு ‘நினைவாலயம்’ என்று பெயர் வைத்துள்ளனர். இதை மாற்றக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதை கண்டித்தும், பெயரை மாற்றக் கோரியும் பா.ஜ.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். அதற்கு பலனில்லை எனில் மாபெரும் போராட்டம் நடத்துவோம். தன்னையே தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர் சுப்பிரமணிய சிவா. பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலயம் அமைக்க விரும்பினார். அவர் விரும்பியபடி அதை ஆலயம் என பெயர் மாற்ற வேண்டும். அன்றாடம் அனைவரும் வந்து வழிபடவும், மரியாதை செய்யவும் ஆவன வேண்டியது தமிழக அரசின் கடமை. பா.ஜ.க மேற்கொண்டு வரும் நற்காரியங்களை தடுப்பதற்காக, தமிழக அரசு காவல்துறையை ஏவி விடுகிறது. தேசியத்தை பாதுகாக்கவும், நாட்டின் ஒற்றுமைக்காக, பிரிவினை வாதத்தை தடுக்க பா.ஜ.க எவ்வித போராட்டத்திலும் ஈடுபடும். பாரத மாதா நினைவாலயம் என்று அரசு ஆணையை வெளியிட்ட அ.தி.மு.கவும், அதே பெயரில் திறந்து வைத்த தி.மு.கவும் தவறு செய்துள்ளது. இதை தற்போதுள்ள அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும்” என்று கூறினார்.