நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல், அதை ஒட்டிய அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சு ஆகியவற்றையெல்லாம் கவனித்தால் ஒரு விஷயம் புரியவரும். குறிப்பாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தாங்கள் குறைந்த இடங்களை ஏற்றுக் கொண்டதற்காகக் கூறிய காரணம் ஒன்றுதான்.
‘இல்லையெனில் பாஜக உள்ளே வந்து விடும்.’ அப்படி என்ன பாஜக தமிழகத்திற்கு அந்நியமானதா? பாஜக உள்ளே வந்தால் என்ன ஆகிவிடும்? ஏன் அனைவரும் இந்த ஒரே கருத்தைக் கூறுகின்றனர்? உள்ளே வருகிறது எனச் சொன்னால், கிறிஸ்தவம் அந்நிய மதக்கோட்பாடு. அது உள்ளே வருகிறது எனச் சொல்லலாம். இஸ்லாம் அந்நிய மதக்கோட்பாடு; அது உள்ளே வருகிறது எனக் கூறலாம். கம்யூனிசம் அந்நிய அரசியல் சித்தாந்தம்; அது உள்ளே நுழைந்து விடும் எனக் கூறலாம். ஆனால், பாஜக உள்ளே நுழைந்துவிடும் எனக் கூறுவது சரிதானா? காரணம் என்ன?
பாஜகவின் சித்தாந்தம் என்பது நமது தேசத்தின் மண்வாசனையுடன் பின்னிப் பிணைந்துள்ள வாழ்வியல் தத்துவம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பண்பாட்டு மூல்யங்களின் தொகுப்பு. நமது கலாச்சாரப் பெருமிதங்களை உயிர்த்துடிப்புடன் மேலெடுத்துச் செல்வதற்கான முயற்சி. இது தான் ஹிந்துத்துவத் தேசியம் என்பது.
இந்த சித்தாந்தக் கண்ணோட்டம் எங்கெல் லாம் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதோ, அங் கெல்லாம் பாஜக பரிமளிக்கிறது. பல்வேறு பிராந்திய மக்களின் பாரம்பரிய வாழ்வியலின் உன்னதம் புரிந்துகொள்ளத் துவங்கியதால், அங்கே பாஜகவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் அந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்நியன் உருவாக்கிய திராவிடம் என்கிற சாம்பல் நமது பாரம்பரிய ஹிந்துத்துவ தேசியத்தை மூடிமறைத்திருந்தது. அந்த சாம்பல் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி ஹிந்துத்துவத் தேசியம் என்கிற அக்னி கனன்றெழத் துவங்கி உள்ளது.
இந்தச் சூழ்நிலையை சமீபத்தில் இரண்டு மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தியபொழுது நன்றாக உணரமுடிந்தது. ‘தேசியம் காக்க தமிழகம் காக்க’, என்று குடும்பத் தொடர்பு இயக்கம் நடத்தியபோது, தொன்னூறு லட்சம் குடும்பங்களைத் தொடர்பு கொண்டோம். அப்போது மக்கள் மத்தியில் ஹிந்துத்துவா கண்ணோட்டம் எந்த அளவுக்கு வலிமையாக உள்ளது என்பதை உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
அதேபோல், ‘ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர’ அறக்கட்டளையின்கீழ் ஸ்ரீராமர் ஆலயம் அமைக்க நிதி சேகரிக்க மக்களிடம் சென்றபோதும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் காணிக்கை வழங்கியதைப் பார்க்க முடிந்தது. தமிழகத்தின் பங்களிப்பாக 108 கோடி ரூபாய் திரண்டது. ஹிந்துத்துவம் என்கிற தேசிய நீரோட்டம் தமிழகத்தில் அனைவரது மனங்களிலும் உள்ளூர இழையோடிக் கொண்டுள்ளது. அந்நீரோட்டம் கூடிய விரைவில் கங்கைப் பிரவாகமாகப் பாய்ந்து தமிழகத்தில் மீண்டும் தேசியத்தினை செழிக்க வைக்கவுள்ளது.
தமிழக மக்கள் மனதில் நிலைகொண்டுள்ள தேசிய சிந்தனை வெளிப்படும்பொழுது, அது அரசியல் களத்தில் பாஜகவின் எழுச்சிக்கு வித்திடும். பாஜக வெளியில் இருந்து உள்ளே வரப்போவதில்லை. தமிழக மக்கள் மனதிற்குள்ளே இருந்து வெளிப்படும் தேசியமே அரசியலில் பாஜகவை உயர்த்திப் பிடிக்கப் போகிறது என்பதையே உணர்த்துகிறது.