பொது சிவில் சட்டத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து, முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களிடையே மிகப் பெரிய அளவில் பிரசாரம் மேற்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, களத்தில் இறங்கி பணியாற்றும்படி பா.ஜ., தலைமை உத்தரவிட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தின்படி, நாடு முழுதும், எவ்வித பாகுபாடும் இல்லாமல், அனைத்து மக்களுக்குமான பொது சட்டத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.உலகில் உள்ள பெரும்பான்மை நாடுகளில் அனைத்து மதத்திற்கான பொது சிவில் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான சிவில் சட்டத்தைப் பொறுத்தவரை, ஷரியத் சட்டமே நடைமுறையில் உள்ளது. மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் வாழும் பல்வேறு சமூக மக்களுக்கான தனிநபர் சட்டத்தை நீக்கி, அதற்கு பதிலாக நாட்டின் அனைத்து சமூக மக்களும் கடைப்பிடிக்க வசதியாக பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த, 1949ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 44ல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவர இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், ‘பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த, பா.ஜ., ஆளும் சில மாநிலங்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றன. நாடு தழுவிய அளவில் இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான வழிகளை மத்திய அரசும் ஆராய்ந்து வருகிறது.
இது குறித்து, புதுடில்லியில் பா.ஜ., தலைமையகம் கூறியுள்ளதாவது: பொது சிவில் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை, சிறுபான்மையினர் மத்தியில் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பிரசார ஏற்பாடுகள், பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜமால் சித்திக் தலைமையிலான நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு, பணிகளும் துவங்கியுள்ளன. இந்த குழு, முஸ்லிம் சமூகத்தின் சிந்தனையாளர்கள், ஆளுமைகள், அச்சமூகத்தினரின் நன்மதிப்பை பெற்ற முக்கிய பிரபலங்களை சந்தித்து விரிவாக உரையாட உள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த, 370வது சட்டப்பிரிவு, தற்போதைய காலத்திற்கு பொருத்தமே இல்லாமல் போனதாலேயே, அதை மத்திய அரசு ரத்து செய்தது. அதைப்போலவே, தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமற்ற பல விஷயங்களை நீக்கி, அனைவருக்கும் நன்மை தரும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் முக்கிய ஷரத்துக்கள் அனைத்துமே இந்த சட்டத்திற்குள் உள்ளடக்கப்படும். ‘முத்தலாக்’ முறை ஒழிக்கப்பட்டது, முஸ்லிம் பெண்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
தற்போதுள்ள, ‘ஹிஜாப்’ நடைமுறையில் கூட, சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முஸ்லிம் பெண்களிடம் மேலோங்கி வருகிறது. மேலும், இந்த சட்டத்தின் வாயிலாக, தத்தெடுத்தல், வாரிசுரிமை, சொத்துரிமை, திருமண உரிமை என பலவற்றில் சிறுபான்மை சமூகத்து பெண்கள் தற்போது சந்தித்து வரும் பாகுபாடுகள் நீக்கப்பட்டு அவர்களுக்கும் சம அந்தஸ்து பெற்றுத்தரப்படும். கடந்த 14ம் தேதியன்று, சிறுபான்மையினரின் பல்வேறு குழுக்களை புதுடில்லிக்கு அழைத்து, மத்திய சட்டக் கமிஷன் பேச்சு நடத்தி உள்ளது. அப்போது, பொது சிவில் சட்டம் குறித்த அவர்களது கருத்துகளும் முறையாக கேட்டு வாங்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44வது பிரிவின்படி, பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்பதையும் கருத்தில் வைத்து, சிறுபான்மையின சமூகத்தினரிடம் தொடர்ச்சியாக பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ‘மோடி மித்ரு’ எனப்படும், ‘மோடியின் நண்பர்கள்’ என்ற பா.ஜ.,வின் சிறுபான்மை பிரிவு, பல்வேறு பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதோடு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர்கள், வழக்கறிஞர்கள், இன்ஜினியர்கள், பேராசிரியர்கள் என பல்துறை நிபுணர்களையும் பொது சிவில் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு பா.ஜ., தலைமையகம் கூறியுள்ளது.