ஜம்மு மற்றும் காஷ்மீரில் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சோம்ராஜ், திடீரென காணாமல் போனார். அவரை பல இடங்களிலும் தேடும் பணியில் குடும்பத்தினர் ஈடுபட்டனர். இந்நிலையில், கத்துவா மாவட்டத்தில் ஹிராநகர் பகுதியில் சோம்ராஜின் வீட்டுக்கு சிறிது தொலைவில் மரம் ஒன்றில் ரத்த காயங்களுடன் அவரது உடல் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டு உள்ளது. உடனடியாக காவல்துறையினர் உடலை மீட்ட பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று அவரது குடும்பத்தினரும் பா.ஜ.க. தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவ மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் முடிந்த பின், அவரது உடல் இறுதி சடங்கிற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை கத்துவா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமைத்துள்ளார்.