பா.ஜ.கவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

ராகுல் காந்தி நாடு முழுவதும் 60 கேரவனுடன் ஒரு சொகுசு நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ள சூழலில், ராகுல் கோவாவை சென்றடைவதற்குள் கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவருக்கு கடும் அதிர்ச்சியை பரிசாக அளித்துள்ளனர். 40 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டசபையில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த 10 எம்.எல்.ஏ.க்களில் இன்று 8 பேர் பா.ஜ.கவில் இணைந்துள்ளனர். கோவா முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா உள்பட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கோவா முதல்வர் பிரமோத் சாவந்தை நேற்று சந்தித்து பேசினர். இதன்பின்னர், காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, நாங்கள் பா.ஜ.க.வில் இணைந்து விட்டோம். பிரதமர் மோடி மற்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கரங்களை வலுப்படுத்த போகிறோம் என கூறினார். இந்த 8 பேர் பா.ஜ.கவில் இணைந்ததால் கோவா சட்டப்பேரவையில் காங்கிரசின் பலம் 2 ஆகக் குறைந்துள்ளது. இந்த சம்பவம் கோவா அரசியல் மட்டுமின்றி ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப நாட்களாக காங்கிரசில் இருந்து வெளியேறும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் காஷ்மீரில் காங்கிரசில் இருந்து விலகியதும் அவருக்கு அதரவாக முக்கிய பொறுப்புகளில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகினர். கடந்த வாரத்தில், ராஜீந்தர் பிரசாத், வகேலா ஆகியோர் குஜராத் காங்கிரசில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.