மீண்டும் பா.ஜ.க

குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 1995ம் ஆண்டு முதல் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது 7வது முறையாக ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க, காங்கிரசை தவிர ஆம் ஆத்மியும் போட்டியிடுவதால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்திலும் தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது என்றாலும் உண்மையில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஏ.பி.பி நியூஸ், சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பா.ஜ.கவுக்கு 45.4 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரஸ் கட்சிக்கு 29.1 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும். குஜராத்தில் புதிதாக களம் காணும் ஆம் ஆத்மிக்கு 20.2 சதவீத வாக்குகள் கிடைக்கும். பா.ஜ.க 131 முதல் 139 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். காங்கிரஸ் 31 முதல் 39 இடங்களிலும் ஆம் ஆத்மி 7 முதல் 15 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க 37 முதல் 45 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். காங்கிரசுக்கு 21 முதல் 29 தொகுதிகள் கிடைக்கும். ஆம் ஆத்மிக்கு ஒரு இடம்கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டிவி, மேட்ரிஸ் நிறுவனம் இணைந்து நடத்திய மற்றொரு கருத்துக் கணிப்பில், குஜராத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு 51.3 சதவீத வாக்குகள் கிடைக்கும். காங்கிரசுக்கு 37.2 சதவீதமும் ஆம் ஆத்மிக்கு 7.2 சதவீத வாக்குகளும் கிடைக்கும். பா.ஜ.க 119 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். காங்கிரசுக்கு 59 இடங்களும் ஆம் ஆத்மி 3 இடங்களும் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஹிமாச்சல பிரதேசத்தில், பா.ஜ.க 41 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும். காங்கிரசுக்கு 25 இடங்கள், ஆம் ஆத்மி உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 3 இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.