கெட்டுப்போன கறியில் பிரியாணி

சென்னை, சென்னை வடபழனியில் உள்ள யா மொகிதீன் பிரியாணி கடையில் உணவின் தரம் குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு தொடர்ந்து பல புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழுவினர் யா மொகிதீன் பிரியாணி கடையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இந்த சோதனையில் 65 கிலோ அளவில் சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய, கெட்டுப்போன கோழி, ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கெட்டுப்போன இறைச்சி மீது பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மாநகராட்சி குப்பை கொட்டும் கிடங்குக்கு எடுத்து செல்லப்பட்டு அவை அழிக்கப்பட்டன. முதற்கட்டமாக ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டு 15 நாட்கள் உணவகம் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக சோதனை நடைபெறும். அப்போது கடையின் தன்மையை பொறுத்தே உணவகம் மீண்டும் இயங்க தடையில்லா சான்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வழக்கம்போல இந்த செய்தியை வெளியிட்ட பல ஊடகங்களும் இந்த கடையின் பெயரை சொன்னால் எங்கே தங்களுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என கருதி, ‘பிரபல தனியார் உணவகம்’ என மட்டும் கூறி முடித்துக்கொண்டு யா மொகிதீன் பிரியாணி கடை என்று சொல்லாமல் மறைத்து விட்டன என்பது தனி கதை.