ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் 1878ல் பெடகள்ளேபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் வெங்கய்யா. இந்திய தேசிய ராணுவத்தில் சேருமாறு இளைஞர்களுக்கு சுபாஷ் சந்திர போஸ் விடுத்த அழைப்பை ஏற்று, 19-வது வயதில் ராணுவப் பயிற்சி பெற்று, ஆப்பிரிக்காவில் நடந்த போயர் யுத்தத்தில் பங்கெடுத்தார் வெங்கய்யா. தனது இளமை பருவத்தில் நேதாஜியை பின்பற்றிய வெங்கய்யா பின்னாளில் தென் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்தபோது காந்தியைச் சந்தித்தார்.
பாரதம் திரும்பியதும் அங்கிலேய ஆட்சிக்கு எதிரான தலைமறைவு இயக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டார். இளமைக் காலத்திலிருந்து வேளாண்மையின் மீது ஒரு தீவிர ஆர்வம் அவருக்கு இருந்தது. இதன் காரணமாக பருத்திச் சாகுபடியில் கவனம் செலுத்தினார். வேளாண் துறையில் புதிய பரிசோதனைகளில் ஈடுபட்டார். கம்போடிய பருத்தி விதைகளையும் நமது பருத்தி விதைகளையும் கொண்டு புதிய பருத்தி ரகங்களை உருவாக்கினார்.
லாகூருக்குச் சென்று சம்ஸ்கிருதம், உருது, ஜப்பானிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். 1916ல் பாரதத்துக்கு ஒரு தேசியக் கொடி (எ நேஷனல் ப்ளாக் ஃபார் இந்தியா) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். தேசியக் கொடிக்கான 13 வடிவமைப்புகளைக் கொண்டிருந்தது அந்தப் புத்தகம். 1918 முதல் 1921வரை காங்கிரஸின் ஒவ்வொரு கூட்டத்திலும் பாரதத்திற்கென ஒரு தனிக் கொடி வேண்டும் என்று தொடர்ந்து வேண்டுகோளை விடுத்தார். அப்போது ஆந்திர தேசியக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் வெங்கய்யா.
விஜயவாடாவில் காந்தியைச் சந்தித்தார். அப்போதும் தேசியக் கொடி பற்றியே பேசினார். காந்தி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரே இரவில் தேசியக் கொடியை உருவாக்கி காங்கிரஸ் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி காந்தியிடம் ஒப்புதலையும் பெற்றார். வெங்கய்யா.
1947ல் தீவிர அரசியலிலிருந்து விலகினார். தான் இறந்த பிறகு தன்னைத் தேசியக் கொடியால் மூட வேண்டும் என்று விரும்பினார். அதன்படி, 1963-ல் அவர் காலமானபோது, அவர் வடிவமைத்த தேசியக் கொடி அவர் மீது போர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பிங்கிலி வெங்கய்யா வடிவமைத்த கொடியில், வெண்மை நிறத்தின் நடுவே முதலில் கைராட்டை சின்னம்தான் இருந்தது. பின்னர், அது அசோக சக்கரமாக மாற்றப்பட்டது.