தேசத்தில் கூட்டுறவுத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பான சஹகார் பாரதி அமைப்பின் தேசிய மாநாட்டில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னாள் தேசிய செயலாளர் பையாஜி ஜோஷி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், ‘கூட்டுறவுத் துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் சஹகார் பாரதி. கடந்த நான்கு தசாப்தங்களாக சில லட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களுடன் இது பணியாற்றி வருகிறது. அனவரின் ஒத்துழைப்புடன் மட்டுமே சமூக மேம்பாடு சாத்தியமாகும் என்பதை ஆர்வலர்கள் மனதில் கொள்ள வேண்டும்.சஹகார் பாரதியின் அடிப்படை மந்திரம் இதுதான். கூட்டுறவு இயக்கம் தார்மீக விழுமியங்கள் மற்றும் நேர்மையுடன் மட்டுமே வாழவும் வளரவும் முடியும். இல்லாவிட்டால் அது அதன் நோக்கத்தையே தோற்கடித்துவிடும். கூட்டுறவுக் குழுக்களில் நமது பங்கு அறங்காவலர்களாக மட்டுமே இருக்க வேண்டும், உரிமையாளர்களாக அல்ல. கூட்டுறவு இயக்கத்தின் மூலம் நிலையான பொருளாதார மேம்பாடு சாத்தியமாகும். கூட்டுறவு இயக்கம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். நாட்டில் கூட்டுறவு கொள்கை மற்றும் பழைய கூட்டுறவு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். கூட்டுறவு இயக்கத்தில் பெண்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியம்’ என பேசினார்.
இம்மாநாட்டில் புதிய தேசிய செயற்குழு அதன் புதிய தேசியத் தலைவர் தீனாநாத் தாக்கூரின் தலைமையில் பதவி ஏற்றது. காம்கோ தலைவர் கிஷோர் குமார் கோட்கி’க்கு மறைந்த லக்ஷ்மண்ராவ் இனாம்தார் நினைவு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த பாடுபட்ட அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர். ராஜேந்திர சிங் சோதி, ULLCS நிறுவன தலைமை ஒருங்கிணைப்பாளர் கிஷோர் குமார், வாம்கோ இயக்குநர் SB ஜெயராஜ் உள்ளிட்டோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.