மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சித் தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் ‘டாக்டர் ஆபாஜி தத்தே சேவா’ நடத்தும் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் (என்.சி.ஐ) திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற ‘அவுர் அனுசந்தன் சன்ஸ்தா’. நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஷிண்டே, “மோகன் பாகவத் ஜி எங்களுக்கும் மற்ற அனைவருக்கும் உத்வேகம் மற்றும் ஆற்றலின் ஆதாரமாக இருக்கிறார். நல்ல வேலையைச் செய்பவர்களை அவர் எப்போதும் ஆதரிக்கிறார். எனவே, தேவேந்திர பட்னாவிஸ், இந்த என்.சி.ஐயை உருவாக்குவதில் சங்கம் அவருக்கு ஒரு உத்வேகமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் தலைவர் ஆதரவு வழங்கும் போது, பெரிய பெரிய திட்டங்களை உருவாக்குவது சாத்தியமே” என்று கூறினார். மறைந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான டாக்டர் ஆபாஜி தத்தேவை பாராட்டிய அவர். “சுகாதார அமைப்பு மற்றும் புற்றுநோயானது அனைவருக்கும் சவாலாக உள்ளது. உத்திப் ரபிரதேசத்திற்கு பிறகு, மகாராஷ்டிராவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், 1.25 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர், அவர்களில் 30 முதல் 40 சதவீதம் பேர் இந்த நோயால் உயிரிழக்கின்றனர். தரமான புற்றுநோய் சிகிச்சையை வழங்குவது அனைவருக்கும் முன் ஒரு சவாலாகும். இந்த இலக்கை அடைய அரசு செயல்பட்டு வருகிறது. விரைவில் தானேவில் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்படும்” என்றார்.
மோகன் பாகவத் தனது உரையில், அதிநவீன வசதிகளுடன் என்சிஐயை கட்டியெழுப்பிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் முயற்சிகளை பாராட்டினார். நாக்பூரைச் சேர்ந்தவரும் ஆர்.எஸ்.எஸ் தொண்டருமான தேவேந்திர பட்னாவிஸின் சிந்தனையில் உருவானதுதான் என்.சி.ஐ என்று கூறப்படுகிறது. முதல் கட்டமாக, இந்நிறுவனம் 2017ம் ஆண்டு முதல் நோயாளிகளுக்கு சேவைகளை வழங்கத் தொடங்கியது. இதன் ஊழியர்கள் நோயாளிகளுக்கு அன்பான முறையில் சேவையை வழங்குகிறார்கள்” என்று கூறினார். இங்கு தங்கள் மகனுடைய சிகிச்சைக்கு வந்த ஒரு முஸ்லிம் தம்பதியுடனான தமது சந்திப்பை நினைவு கூர்ந்த அவர், “என்.சி.ஐயில் வழங்கப்பட்ட தரமான சிகிச்சையை தம்பதியினர் பாராட்டினர். தங்கள் மகனின் சிகிச்சையின் போது அதன் ஊழியர்கள் அளித்த அன்பான நடத்தை மற்றும் தார்மீக ஆதரவை நினைவு கூர்ந்தனர். சமுதாயத்திற்கு சேவை செய்ய மக்கள் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை அடிப்படைத் தேவைகள், சமூகம் இப்போது அதை உணர்ந்துள்ளது. எல்லோரும் நல்ல சுகாதார வசதிகளையும் கல்வியையும் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எதையும் செய்ய தயாராக உள்ளனர். அரசும் நிர்வாகமும் இந்த இலக்கை நோக்கி தங்கள் சொந்த வழியில் பங்களித்து வருகின்றன. ஆனால் அவர்களின் முயற்சி மட்டும் போதாது. நாட்டின் 148 கோடி மக்களின் தேவையாக இருப்பதால் சமுதாயத்தின் முயற்சிகளும் இதில் கண்டிப்பாக தேவை” என்று பேசினார்.
புற்றுநோயால் தந்தையை இழந்ததை நினைவு கூர்ந்த தேவேந்திர பட்னாவிஸ், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைப் பற்றியும் தனது குழு மத்திய பாரதத்தில் உள்ள மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மற்றும் மலிவான புற்றுநோய் சிகிச்சை வசதியை உருவாக்க விரும்புவதாகவும் கூறினார். மோகன் பாகவத் மற்றும் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பையாஜி ஜோஷி ஆகியோரின் வழிகாட்டுதல்களை நினைவு கூர்ந்த அவர், “சங்கத்தின் உத்வேகத்தால் தான் நாம் இவ்வளவு நல்ல மருத்துவமனையை உருவாக்க முடிந்தது என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, “அமெரிக்காவில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் பாரதத்தில் புற்றுநோயால் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, மேலும் இந்த நோயின் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. புற்றுநோயை சரியான முறையில் கண்டறிந்து சிகிச்சையளிப்பது அவசியம். விதர்பா மற்றும் மத்திய பாரதத்தில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு சேவை செய்வதில் என்.ஐ.சி முக்கிய பங்கு வகிக்கும். இந்த நோயிலிருந்து நாட்டை விடுவிக்க புற்றுநோய் பகுதியில் ஆராய்ச்சிகளை நாம் அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதன் தலைமை நிர்வாக அதிகாரியான ஷைலேஷ் ஜோக்லேகர், வந்திருந்த விருந்தினர்களுக்கு இந்த மருத்துவமனையின் பார்வை, நோக்கம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றை விளக்கி, மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை சேவைகள் குறித்து விவரித்தார். நோயாளிகளுக்கு வரவேற்கும் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் நோக்கத்தை வெளிப்படுத்திய அவர், “நாங்கள் இம்மையம்ம்துவக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே இது ஒரு மருத்துவமனையைப் போல இருக்கக்கூடாது, மருத்துவமனையைப் போல வாசனை இருக்ககூடாது, மக்கள் இதனை மருத்துவமனையைப் போல உணரக்கூடாது என்று முடிவு செய்தோம்,” என்றார். இந்த நிகழ்வில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.