விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இருந்து சி.என்.பாளையம் செல்லும் சாலையை ரூ.59.08 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கும், துத்திப்பட்டு கிராமத்தில் இருந்து இருளர் காலனி மயான பாதை செல்லும் சாலையை ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையாக அமைப்பதற்கும், துத்திப்பட்டு முதல் கிருஷ்ணாபுரம் வரை செல்லும் சாலையை ரூ.1.18 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா நேற்று (ஜூலை 24) நடைபெற்றது. தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூமி பூஜை செய்து பணியை துவங்கி வைத்தார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் மஸ்தான், முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் அமைச்சருமான உதயநிதி ஆகியோரின் பெயரிலும், தனது பெயர், நட்சத்திரத்தையும் குறிப்பிட்டு பூஜையை துவங்கி வைத்தார். பகுத்தறிவு பேசும் முதல்வர் ஸ்டாலினின் பெயரில் அவரது அமைச்சரவையை சேர்ந்தவர், அவரது பெயரிலேயே பூமி பூஜை செய்தது பேசு பொருளாகியுள்ளது.