தமிழ் சினிமாவின் பாரதியார் பாடல்களால் தேசிய முழக்கம்

மகாகவி பாரதி, வரகவி. பாலப் பருவத்திலேயே யாப்பிலக்கணத்துடன் கூடிய செய்யுள்களையும் தாளகதியுடன் கூடிய பாடல்களையும் எழுதும் வல்லமை பெற்றிருந்தவர். ஆனால், அவரது வாழ்நாளில் அவரது கவிதைகள் பெற்றிருக்க வேண்டிய முழுமையான மரியாதையைப் பெறவில்லை என்பது பொதுவானதொரு கருத்து. ஏனெனில், அன்றைய கால ஆங்கிலேய ஆட்சியை பாரதி எதிர்த்த காரணத்தால், அவரது கவிதைகள் மீதான தடை இருந்தது. அதையும் மீறித்தான் அவரது தேசபக்தி பாடல்கள் சுதந்திரப் போர்க்களத்தில் வீறுடன் பாடப்பட்டன.

பாரதியின் பாடல்களை அவரே ராகத்துடன் பல பொதுக்கூட்டங்களில் பாடியிருக்கிறார். தனது பல இசைப்பாடல்களுக்கு ராகம், தாளம், ஸ்வர வரிசையையும் கூட பாரதி எழுதி வைத்திருக்கிறார். எஸ்.ஜி.கிட்டப்பா போன்றோரின் அக்கால நாடக மேடைகளில் பாரதியின் பாடல்கள் ஒலித்துள்ளன.

பாரதியின் எழுத்துலகில் அவரது கவிதைகளின் பங்களிப்பு சுமார் 10 சதவீதம் மட்டுமே. அவரது பத்திரிகைக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், சிறுகதைகள், புதினங்கள், மதிப்புரைகள், கடிதங்கள், சித்திர விளக்கங்கள், வரலாற்றுக் கட்டுரைகள் ஆகியவை இன்னமும் தமிழ் மக்கள் அனைவரும் அறிந்தாரில்லை.

அது போலவே, அவரது ஒட்டுமொத்தக் கவிதைகளில் தேசபக்திப் பாடல்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து சதவீதம் மட்டுமே. அவரது கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, ஸ்வசரிதை, வசன கவிதை, பக்திப்பாடல்கள், ஞானப் பாடல்கள், பாஞ்சாலி சபதம், தனிப்பாடல்கள் போன்றவை பாரதியின் அற்புதமான கவித்துவ ஆளுமைக்கு அடையாளங்களாக மிளிர்கின்றன. இதனையும் தமிழ் மக்கள் பலரும் அறியாதிருப்பது தான் தமிழின் அவலம்.

அள்ள அள்ளக் குறையாத செல்வம்:

தனது குறுகிய வாழ்நாளில் அவர் நிகழ்த்திச் சென்ற சாதனைகளை நாம் எட்ட வேண்டுமானால், அதற்கு தெய்வ வரம் வேண்டும்.   குறைந்தபட்சம், அவரது படைப்புகள் அனைத்தையும் படிக்கவே தெய்வீக அருளிருந்தால் தான் இயலும். அத்தனையை
யும் எழுதிக் குவித்திருக்கிறார்.

அதுபோலவே, பாரதியின் பாடல்கள் மக்களைக் கவர்ந்த காரணத்தால் பல திரைப்படங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில் பாரதியின் கவிதைகள் பல தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், தமிழ் இலக்கிய உலகின் மெத்தனத்தால், தமிழின் தவப்புதல்வரான மகாகவி பாரதியின் திரைப்பாடல்களின் பட்டியல் கூட முழுமையாக நம்மிடம் இல்லை என்ற வேதனையை இங்கு பதிவு செய்தாக வேண்டியுள்ளது.

தமிழ்த் திரையுலகின் ஆரம்பம் 1905ல் சாமிக்கண்ணு வின்சென்டின் சினிமா முயற்சிகளுடன் துவங்கினாலும், 1916ல் சென்னையில் தயாரிக்கப்பட்ட  ‘கீசகவதம்’ தான் முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெறுகிறது. ஆனால் அப்போது படத்தின் ஒளிக்காட்சிகள் மட்டுமே இருந்தன. 1931ல் தான் முதல் பேசும் படமான  ‘காளிதாஸ்’ வெளியானது.

திரைப்படத்தின் சிறப்பு குறித்து மகாகவி பாரதி என்ன கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. 1916 முதல் 1920 வரையிலான காலகட்டத்தில் புயலில் அகப்பட்ட தோணி போல அவர் அலைக்கழிக்கப்பட்டிருந்தார். 1920 முதல் 1921ல் தனது வாழ்வின் இறுதி வரை சுதேசமித்திரன் இதழில் பணிபுரிந்தார். எனவே, அவரது திரைப்படம் குறித்த பார்வையை அறிய முடியவில்லை. ஆனால், அவரே எதிர்பாராத விதமாக கடந்த 86 ஆண்டுகளாக அவரது கவிதைகள் பல தமிழ்த் திரைப்படங்களில் இன்னிசையுடன் பாடல்களாக ஒலித்து வருகின்றன.

தமிழில் பேசும் படங்கள் வெளிவந்ததை (1931) அடுத்து நான்கே ஆண்டுகளில், பாரதியின் கவிதை முதன்முதலாக திரையுலகில் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பாடல்,  ‘வாழ்க  நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே’. படம்: ‘மேனகா’ (1935). அந்தக் காலத்தில் பாரதியின் கவிதைகள் மீது ஆங்கிலேய அரசு தடை விதித்திருந்த காலம். என்றபோதும், இப்பாடலை பள்ளிப் பெண்கள் சேர்ந்து பாடுவதாக திரைப்படத்தில் சமயோசிதமாக அமைத்திருந்தனர். ராஜா சாண்டோ இயக்கத்தில், டி.கே.எஸ்.சகோதரர்களின் மேடை நாடகம் திரைப்படமானபோது, இப்பாடல் அதில் இடம் பெற்றது.

காங்கிரஸ் அரசு ஜுலை 1937ல் பதவிக்கு வந்தவுடன், தேசிய உணர்ச்சியைத் தடை செய்யும் திரைப்படத் தணிக்கை விதிகள் தளர்ந்தன. கவிஞர் ச.து.சு.யோகியார் இயக்கிய ‘அதிர்ஷ்டம்’ படத்தில் (1939),  பாரதியாரின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ இடம்
பெற்றது. மாடர்ன் தியேட்டர்ஸின் ‘உத்தமபுத்திர’னில் (1940) ‘செந்தமிழ் நாடெனும் போதினிலே’ என்ற பாடலை பி.யு.சின்னப்பாபாடினார்.

1937ல் வெளிவந்த ‘நவயுகன் அல்லது கீதாசாரம்’ படத்தில் பாரதி பாடல் பயன்படுத்தப்பட்டதாகத்  தகவல் உள்ளது. ஆனால் எந்தப் பாடல் என்று தெரியவில்லை. அதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

பாரதி பாடல்களுக்கு உரிமைப் போர்:

பாரதியின் பாடல்களை இசைத்தட்டிலும் வேறு வகையிலும் பதிவு செய்யும் உரிமையை, பிரபல நகை வர்த்தக நிறுவனமான சுராஜ்மல் அண்ட் சன்ஸ் ரூ. 600க்கு வாங்கி வைத்திருந்தது. அந்த நிறுவனம் ‘பிராட்காஸ்ட்’ என்ற பெயரில் 1934லிருந்து வெளியிட்ட இசைத்தட்டுகளுக்காக அந்த ஒப்பந்தத்தைச் செய்திருந்தது.

அச்சமயத்தில் காரைக்குடியில் சொந்த ஸ்டூடியோ நிறுவியிருந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், தேசியம் பேசிய ‘நாம் இருவர்’ என்ற நாடகத்தை 1946ல் படமாக்க முடிவு செய்தார். அந்த நாடகக் கதையுடன், ‘ஆடுவோமோ பள்ளு பாடுவோமே’, ‘விடுதலை விடுதலை’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ முதலிய பாரதி பாடல்கள் அழகாகப் பின்னப்பட்டிருந்தன. நாடு சுதந்திரம் அடைந்துவிடும் என்ற எண்ணம் எங்கும் பரவியிருந்த காலம் அது. இந்தத் தருணத்தில், பாரதி பாடல்களுடன் தனது திரைப்படம் வெளியாக வேண்டும் என அவர் விரும்பினார். அதற்காக,  சுராஜ்மல் நிறுவன உரிமையாளர் ஜெயசிங்கலால் மேத்தாவிடம் பேரம் பேசி, ரூ.10,000  கொடுத்து அதன் உரிமையை அவர் பெற்றார். வாழ்நாளெல்லாம் குறைந்த செல்வத்தையே கண்ட அந்த மகாகவியின் பாடல்களுக்கு அவர் மறைந்து 25 ஆண்டுகள் கழிந்து பெரும் மதிப்பு ஏற்பட்டிருந்தது.

1947 ஜன. 12ல்,  ‘நாம் இருவர்’ வெளிவந்தது; ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே’ என்று சுதந்திரத்துக்கு இன்னமும் 8 மாதங்கள் இருக்கையிலேயே பாடியது. டி.கே.பட்டம்மாளின் கம்பீரமான குரல் பின்னணியில் ஒலிக்க, குமாரி கமலா  நடனம் ஆடினார். படத்தில்,  ‘விடுதலை விடுதலை விடுதலை’ என்று பாரதி பாடலை முழங்கினார் டி.ஆர்.மகாலிங்கம். பாரதியைப் புகழ்ந்து ஒரு சிறு சொற்பொழிவும் ஆற்றினார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாரதியின் பாடல்கள் திரையுலகில் முக்கியத்துவம் பெறத் துவங்கின.

இதனிடையே, டி.கே.எஸ். சகோதரர்கள் தங்கள் ‘பில்ஹணன்’ படத்தில் (1948) பாரதியின் ‘தூண்டிற் புழுவினைப் போல்’ பாடலைச் சேர்த்தார்கள். அப்போது திரைப்படப் பாடல் உரிமை தொடர்பான வழக்கு ஏற்பட்டது. ஆயினும் பில்ஹனன் திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரிய ஏவிஎம் நிறுவனத்தின் வழக்கில், நீதிபதி தடை விதிக்க மறுத்துவிட்டார். அதேசமயம், பாரதி பாடல்களைத் தனியாரிடமிருந்து விடுவிக்க ஓர் இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார் டி.கே.சண்முகம். அதற்கு எழுத்தாளர்கள் பலரும் துணைநின்றனர்.

அதையடுத்து, அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாக்கப்படுவதாக 1949ல் அறிவித்தார். அதையடுத்து, 1949 மார்ச் 12ல் முதல்வரை நேரில் சந்தித்த ஏ.வி.மெய்யப்ப செட்டியார், மிகுந்த பெருந்தன்மையுடன், தன் வசமிருந்த பாரதி பாடல் உரிமைகளை விலைபேசாமல் அரசிடம் ஒப்படைத்தார்.

எத்தனை எத்தனை வண்ணங்கள்?

அதன்பிறகு, பல திரைப்படங்களில் பாரதியின் பாடல்கள்  பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவரது பாடல்கள் இடம் பெற்றிருக்
கின்றன; இந்த பாடல்களுக்கு ஆர்.சுதர்சனம், டி.கே.எஸ்.சகோதரர்கள், ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்பராமன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், எல்.வைத்தியநாதன், இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பலர்  இசை அமைத்திருக்கிறார்கள்; எம்.கே.தியாகராஜ பாகவதர்,
பி.யு.சின்னப்பா, டி.கே.பட்டம்மாள், டி.ஆர்.மகாலிங்கம், எம்.எல்.வசந்த
குமாரி, டி.எம்.சௌந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா, எஸ். ஜானகி, கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ராஜ்குமார் பாரதி உள்பட பல சிறந்த பாடகர்கள் பாரதியின் கவிதை வரிகளைப் பாடியிருக்கிறார்கள்.

ஆனால், இந்தப் பாடல்கள் முழுமையும் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்துள்ளவை சுமார் 70 பாடல்கள் மட்டுமே. மகாகவி பாரதி மீதும் தமிழ்த் திரைப்பாடல்கள் மீதும் ஆர்வம் உள்ளவர்கள் இதுகுறித்து ஆராய்ந்து, பாரதியின் திரையிசைப் பாடல்கள் அனைத்தையும் மீட்க வேண்டும். பாரதியின் நினைவு நூற்றாண்டு அதற்கொரு வாய்ப்பாக அமைய வேண்டும்.

பாரதி திரைப்படப் பாடல்களாக நினைத்து தனது கவிதைகளை எழுதவில்லை. அவை முழுமையான யாப்பு இலக்கணத்துடன் பொருந்திய கவிதைகள். அவை திரைப்பட இசையமைப்பாளர்கள் விரும்பும் தாளகதி, சந்தங்களுடன் இருப்பதும், உணர்ச்சி மிக்க சொற்களின் லயம் மிகுந்திருப்பதும் தான், அவரது கவிதைகளை நாடச் செய்திருக்கின்றன. திரைப்படத்தின் காட்சிகளுக்குத் தேவை
யான நவரசங்களை வெளிப்படுத்தும் பாடல் வரிகள் பாரதியின் கவிதைகளில் செறிந்திருப்பதால் தான் அவை, திரைப்படங்களிலும் வெற்றிகரமாக பவனி வருகின்றன.

அதனால்தான், நவீன இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் (சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா- – கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்), மலையாள இசையமைப்பாளரான மோகன் சித்தாராவும் (காற்று வெளியிடை கண்ணம்மா- – தன்மத்ரா), இளம் தலைமுறை இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜனும் (சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா- – குற்றம் கடிதல்) பாரதியை எளிதாக அணுக முடிகிறது.

அது மட்டுமல்ல, பாரதியின் ஒரே பாடலே பல்வேறு வடிவங்களில், பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்லதையும் காணமுடிகிறது. உதாரணமாக, பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடல் மணமகள் (1951), நீதிக்கு  தண்டனை (1987), குற்றம் கடிதல் (2015) என வெவ்வேறு காலகட்ட திரைப்படங்களில்  வெவ்வேறு விதமாக பவனி வருகிறது.

இதேபோல, மங்கியதோர் நிலவினிலே, காற்று வெளியிடை கண்ணம்மா, ஆடுவோமே பள்ளு பாடுவோமே, காக்கை சிறகினிலே நந்தலாலா, நல்லதோர் வீணை செய்தே, மனதில் உறுதி வேண்டும் எனப் பல பாடல்கள் வெவ்வேறு திரைப்படங்களில் வேறு வேறு தளங்களில் நமது இதயத்தைக் கவர்கின்றன.

காலத்தை மீறி கனவு கண்ட அந்த மகாகவியின் கவிதைகள் காலத்தை வென்று இன்றைய கலைஞர்களுக்கும் உத்வேகம் அளிப்பனவாக இருப்பது நமது பேறு. காதல், வீரம், தேசபக்தி, பாசம், சோகம், ஆனந்தம் என திரைப்படம் எதிர்பார்க்கும் அனைத்து உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வரிகளுடன் இன்னமும் பல நூறு கவிதைகள் பாரதி புதையலில் காத்திருக்கின்றன என்பதும் உண்மை.