வையத்தலைமை கொள்ளும் பாரதம்!
மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் “வையத்தலைமை கொள்” என்கிறார். இன்று நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பாரதத்தின் கீர்த்தியை ஓங்கச்செய்து, “வையத்தலைமை” என்ற உன்னத நிலையை நோக்கி எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், பாரதியின் கனவு நனவாகி வருவதைப் பார்க்கிறோம். ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பாரதம் ஏற்கும் இவ்வேளையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “வாசுதேவ குடும்பகம்” (உலகம் முழுவதும் ஒரே குடும்பம்) என்ற கருத்து பாரதப்பண்பாட்டில் ஆழமாக வேரூன்றியுள்ளது என்று கூறியதும் இங்கு நினைவுறத்தக்கது.
கட்டுண்டு கிடக்கையிலே கனவுகாண இயலுமா?
பாரத தேசத்தவர், ஆங்கில ஆதிக்கத்திற்குக் கட்டுண்டு “அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும், உச்சத்திற் கொண்ட ஊமைச் சனங்களாய்” நிலைகெட்டிருந்த சூழலில், கற்பனை செய்துகூடப் பார்த்திருக்கமுடியாதபடி, “வையத்தலைமை எனக்கருள்வாய்” என்று காளியை நோக்கி பாரதி வரம் கேட்டதை என்னவென்று சொல்வது? ஆனால், இயலாதது போல் தோன்றும் பெருஞ்செயல்கள் எல்லாமே இப்படிச்சிலர் காணும் கனவுகளாலேயே ஆக்கம் பெறுகிறது என்பதும் உண்மை தான்.. “கனவு காணுங்கள்” என்று மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களிடம் கூறியதும், பாரதியின் துணிச்சலை நினைவில் கொண்டு தானோ, என்று தோன்றுகிறது.
வையத்தலைமைக்குரிய பண்புகளாக பாரதி அடையாளம் காட்டுவது:
“நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் அவை நேரே இன்றெனக்குத்தருவாய் ….விந்தை தோன்றிட இந்நாட்டை நான் தொல்லை தீர்த்து உயர்வு, கல்வி, வெற்றி சூழும் வீரமறவு, ஆண்மை, கூடும் திரவியத்தின் குவைகள் திறல் கொள்ளும் கோடிவகைத் தொழில்கள் – இவை நாடும்படிக்கு வினை செய்து இந்த நாட்டோர் கீர்த்தியுடனோங்கக் கலிசாடும் திறன் எனக்குத் தருவாய். உன்னைக் கோடிமுறை தொழுதேன். இனி வையத்தலைமை எனக்கருள்வாய்” .என்று அன்னை காளியிடம் வேண்டும் துணிவு (யோகசித்தி என்ற பாடல்) பாரதியைத்தவிர யாருக்கு எழமுடியும்?
- முதற்கடமையாக அவர் குறிப்பிடுவது “தொல்லை தீர்ப்பது“: இதை இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம்.
அ) சுதந்திரம் பெற்று சுயராஜ்ஜியத்தை திரும்பப்பெறுவது:
ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த “தொல்லை தீர்த்து” சுதந்திரம் பெற்று சுயராஜ்ஜியத்தை திரும்பப்பெறுவதையே முதல் கடமையாகச் சொல்கிறார்.
ஆனால் பலநூறு ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டுத் தாழ்வு மனப்பான்மையால் “நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி, வஞ்சனை சொல்லும் வாய்ச் சொல் வீர்ராக” “ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்களாய், மானம் சிறிதென்றெண்ணி வாழ்வு பெரிதென்றெண்ணும் ஈனராய்” இருந்த மக்களுக்கு, சுதந்திர வேட்கையை ஊட்டுவது எளிதான காரியமாக இருக்கவில்லை.
ஆகவே,”மானம் துறந்து அறம் மறந்தும் பின் உயிர் கொண்டு வாழ்வது சுகமென்று மதிப்பாரோ?” “கண்ணின் இனிய சுதந்திரம் போனபின் கைகட்டிப்பிழைப்பாரோ? என்று இடித்துரைத்து “மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதும், எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி இரு கண்ணற்ற சேய்போல் கலங்குவதையும்” நிதர்சனமாக எடுத்துச்சொல்லி, “நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே,.. எந்த நாளும் உலகமீதில் அச்சம் ஒழிகவே” “அச்சமில்லை…. இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை” என்ற நிலைக்கு அஞ்சிக்கிடந்த சமூகத்தை எழுச்சி பெறச்செய்து, “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்” என்று சுதந்திர வேட்கையை கனல்விட்டு எரியச்செய்து “நாமிருக்கும் நாடு நமது… இது நமக்கே உரிமையாம்… பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்.” சுதந்திரம் எமது பிறப்புரிமை என்று போராடவைத்த பெருமை பாரதியையே சேரும்.
ஆ) நிலை கெட்டிருந்த சமூகத்தை நல்வழிப்படுத்தி மாற்றம் ஏற்படுத்தல்:
“நண்ணிய பெருங்கலைகள் பத்துநாலாயிரங்கோடி நயந்து நின்ற புண்ணிய நாட்டினிலே பாரதர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்”; “கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடியென்றால் அது பெரிதாமோ?” “ஜாதிகள் இல்லை… குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்”, “வெறும் சூதினால் ஏற்படுத்தப்பட்ட பிரிவினைகள் போய் அத்தனை பேரும் நிகரெனக்கொண்டால், துன்பங்கள் யாவுமே போகும். இன்பங்கள் யாவும் பெருகும்” என்று எடுத்துரைத்தார். “மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப் பேதைகள் போலுயிரைப் பேணியிருந்தவராய், நாட்டில் அவமதிப்பும் நாணமுமின்றி இழிசெல்வத் தேட்டில் விருப்புங் கொண்ட சிறுமையராய்”, பாரதத்தின் செம்மை மறந்து நிலைகெட்டிருந்த மனிதரின் இழிநிலை காண “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று குமுறி, இடித்துரைத்து, பாதகஞ் செய்பவரைக் கண்டால் பயங்கொள்ள லாகாது.. மோதி மிதித்துவிடு அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு.. துன்பம் நெருங்கிவந்த போதும் சோர்ந்துவிடலாகாது… வீரர் பிறந்ததிந்த நாடு… திடங்கொண்டு போராடு. வயிர முடைய நெஞ்சு வேணும் இதுவே வாழும் முறைமை என்றார். இனியொரு விதி செய்வோம் அதை எந்தநாளுங் காப்போம் தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று நமது சிந்தனை இருக்க வேண்டும் என்று நல்வழிப்படுத்தினார்.
- தேசத்தின் பாரம்பரியம் குறித்து பெருமைப்படுதல்:
“ஞானத்திலே பரமோனத்திலே உயர் மானத்திலே அன்னதானத்திலே கானத்திலே அமுதாக நிறைந்த கவிதையிலே உயர் நாடு! தீரத்திலே படைவீரத்திலே நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே சாரத்திலே மிகுசாத்திரங் கண்டு தருவதிலே உயர் நாடு!
நன்மையிலே உடல் வன்மையிலே செல்வப் பன்மையிலே மறத்தன்மையிலே பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின் புகழினிலே உயர் நாடு! ஆக்கத்திலே தொழில் ஊக்கத்திலே புயவீக்கத்திலே உயர் நோக்கத்திலே காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினிலே உயர் நாடு! ….வண்மையிலே உளத்திண்மையிலே மனத்தண்மையிலே மதிநுண்மையிலே உண்மையிலே தவறாத புலவர் உணர்வினிலே உயர்ந்தது” பாருக்குள்ளே நல்ல எங்கள் பாரத நாடு” என்று பாரதத்தின் முந்தைய பாரம்பரியம், பெருமை,வீரம் எல்லாவற்றையும் எழுச்சி மிக்க எளிய தமிழ்ப்பாடல்கள் மூலம் எடுத்துச்சொல்லிப் புரிய வைத்தார்.
- தேசத்தையும் தேச மக்களையும் உயிராக நேசித்தல்:
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும்., அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும்,. அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும்., இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள் ஈந்ததும்., எங்கள் அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிந்ததும்,, மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததும்,.
தங்க மதலைகள் ஈன்று அமுதூட்டித் தழுவியதும்,. மக்கள் துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள் சூழ்ந்ததும், பின்னர் அங்கவர் மாய அவருடற் பூந்துகள் ஆர்ந்ததும்” இந்த பாரத நாடே!!! இதை வந்தனை கூறி மனதில் இருத்தி, என் வாயுற வாழ்த்தேனோ? இதை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வணங்கேனோ? என்று தனது உயிர்த்துடிப்பே நம்நாடும் நம்மக்களும் தான் என்று வாழ்ந்தவர் பாரதி..
- தேசப்பாதுகாப்பில் தீவிர உறுதி:
“தீரத்திலே படைவீரத்திலே…புயவீக்கத்திலே உயர் நோக்கத்திலே…. காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினிலே உயர் நாடு… பாருக்குள்ளே நல்ல.. எங்கள் பாரத நாடு!” இதனைப் பாதுகாப்பதற்கு அணியணியாய் யாரெல்லாம் முன்வந்து நிற்கிறார்கள், பாரீர்! என்று பட்டியல் இடுகிறார்: செந்தமிழ் நாட்டுப் பொருநர், கொடுந்தீக்கண் மறவர்கள், சேரன்றன் வீரர், சிந்தை துணிந்த தெலுங்கர், தாயின் சேவடிக்கே பணி செய்திடு துளுவர், கன்னடர், ஓட்டியரோடு போரில் காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்களொப்ப நிற்கும் பொற்புடையார், இந்துஸ்தானத்து மல்லர்
பூதலம் முற்றிடும் வரையும், அறப் போர் விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும், பாரில்மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்
பஞ்சநதியத்துப் பிறந்தோர், முன்னைப் பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார்
துஞ்சும் பொழுதினும் தாயின் பதத்தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும்
சேர்ந்து அதைக் காப்பது காணீர்.. அவர்கள் திரண்டு நிற்கும் இந்த ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?” என்று மகிழ்கிறார்
- தேசத்தின் வேறுபட்ட சமுதாயங்களின் ஒற்றுமை:
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும், இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்”. ஆகவே, நாம் ஒன்றுபட, “சிந்து நதியின்மிசை நிலவினிலே சேரநன்னாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம். கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண்டு சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்.
காசி நகர்ப்புலவர் பேசுமுரைதான் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்
ராசபுத் தானத்து வீரர்தமக்கு நல்லியற் கன்னடத்துத் தங்கமளிப்போம்”.
“முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை. ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை”.”எப்பதம் வாய்த்திடுமேனும் நம்மில் யாவர்க்கும் அந்த நிலைபொதுவாகும். முப்பது கோடியும் வாழ்வோம் வீழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்” “பாரத சமுதாயம் வாழ்கவே!” என்று முழங்கினார்..
- தேசத்தின் வளமைகள் மீது பெருமிதமடைதல்:
“மன்னும் இமயமலை எங்கள் மலையே; மாநிலமீது அதுபோல் பிறிதில்லையே!
இன்நறுநீர் கங்கைஆறு எங்கள்ஆறே; இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏதுவேறே?
பன்னரும் உபநிடநூல் எங்கள் நூலே; பார்மிசை ஏதொரு நூலிது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே; போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே!
மாரத வீரர் மலிந்த நன் நாடு; மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு!
நாரத கான நலம் திகழ் நாடு; நல்லன யாவையும் நாடுறு நாடு!
பூரண ஞானம் பொலிந்த நன் நாடு; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு!
பாரத நாடு பழம்பெரும் நாடே; பாடுவம் இதை எமக்கில்லை ஈடே ” என்றும்
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒருசக்தி பிறக்குது மூச்சினிலே .
காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருனை என மேவிய யாறு பலவோடத் திருமேனி செழித்த தமிழ்நாடு, கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு, பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு” என்றும் பெருமிதப்பட்டார்..
- தேசத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்கள்:
“ஓயுதல் செய்யோம் தலைசாயுதல் செய்யோம். உண்மைகள் சொல்வோம், பல வண்மைகள் செய்வோம்” “ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்”. “ஆயுதம் செய்வோம் .. காகிதம்… குடைகள்… உழுபடைகள்… கோணிகள்… இரும்பாணிகள்… நடையும் பறப்புமுணர் வண்டிகள்… ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்” யாவையும் செய்வோம். “வானை யளப்போம்…. சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிவோம். வெட்டுக் கனிகள்செய்து தங்கமுதலாம் வேறு பலபொருளுங் குடைந்தெடுப்போம். எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம்” உலகத் தொழிலனைத்தும் உவந்து செய்வோம் என்றார். மட்டுமின்றி, “இரும்பைக்காய்ச்சி உருக்கிடுவீரே யந்திரங்கள் வகுத்திடுவீரே! கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே! கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரந்தொழில் செய்திடுவீரே!
“மண்ணெ டுத்துக் குடங்கள் செய்வீரே மரத்தைவெட்டி மனை செய்குவீரே
என்று பொருளாதாரம் சிறக்க ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களை வரிசையிட்டார்.
8. மக்கள் பெறும் கல்வியின் மீதான அக்கறை:
“இன்னரும் கனிச்சோலைகள் செய்தல் இனியநீர் தண்சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல்….அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்றார்.
“அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய். சிறியரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும். வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்; பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப்பாரை உயர்த்திட வேண்டும். பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிபேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக் குள்ளே சிலமூடர் மாதரறிவைக் கெடுத்தார். கண்கள் இரண்டினில் ஒன்றைக் காட்சி கெடுத்திடலாமோ? பெண்க ளறிவை வளர்த்தால் வையம் பேதைமையற்றிடுங் காணீர்!” “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும். இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும். மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லுவதிலோர் மகிமை யில்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்” என்று கல்வி கற்பிக்கும் வழிமுறைகளைப் பட்டியலிட்டார்..
- தம் மொழிவளங்களின் மீது கர்வம்:
“வானமளந்த தனைத்தும் அளந்திடும் வண்மொழி… ஏழ்கடல் வைப்பினும் இசைகொண்டு தன்மணம் வீசும் எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே என்றார்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்….
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்றார்.
அதே சமயம் “சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம்” என்று தெலுங்கு மொழியின் பெருமையையும் பேசி பாரதத்தின் மொழிகள் எல்லாமும் நிறைந்த வளம் உடையவை என்று கர்வத்துடன் சொன்னார்.
- வெளியுறவும் வர்த்தகமும் குறித்த பார்வை:
அண்டை நாட்டினருடன் உறவும் வர்த்தகமும் குறித்த பாரதியின் பார்வை:
“சிங்களம் புட்பகம் சாவகமாதிய தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று சால்புறக்கண்டவர் தாய்நாடு, சீன மிசிரம் யவனரகம் இன்னும் தேசம் பலவும் புகழ்வீசிக் கலை ஞானம், படைத்தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு,” (சிங்களம்-ஸ்ரீலங்கா, புட்பகம்-பர்மா, சாவகம்- மலேசியா, சீனம் – சீனா, மிசிரம்- எகிப்து, யவனம்- கிரேக்கம் மற்றும் ரோம்)
“முத்துக் குளிப்பதொரு தென்கடலிலே மொய்த்து வணிகர் பல நாட்டினர் வந்தே, நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்து நம்மருள் வேண்டுவது மேற்கரையிலே”.”பட்டினி லாடையும் பஞ்சிலுடையும் பண்ணி மலைகளென வீதிகுவிப்போம், கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார் காசினி வணிகருக்கவை கொடுப்போம்”.என்றார்.
இவை தவிர இத்தாலி நாட்டு மாஜினி, பெல்ஜியம் மற்றும் ரஷ்யப் புரட்சிகளையும் புகழ்ந்து, அந்த எழுச்சிகளுக்கும் ஆதரவு நல்கினார்.
- வெளிநாடுகளில் உள்ள பாரத மக்களின் நலத்தில் அக்கறை:
பிஜி நாட்டில் கரும்புத் தோட்டத்தில் கூலித்தொழிலாளிகளாக வேலை செய்யச்சென்ற பாரதப்பெண்கள் படும் பாட்டைக் கேள்வியுற்று பாரதி குமுறும் பாடல் வெளிநாட்டிலிருக்கும் பாரதமக்களின் நலத்தில் அவர்கொண்ட அக்கறையை எடுத்துரைக்கும்:
கரும்புத் தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்கு கின்றனரே அவர்துன்பத்தை நீக்க வழியில்லையோ ஒரு
மருந்திதற்கிலையோ செக்குமாடுகள் போலுழைத் தேங்குகின்றார்….
நெஞ்சம் குமுறுகிறார் கற்பு நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் துன்பப்பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே அவர் சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ ஹேவீர கராளி, சாமுண்டி காளி!
- தம்மக்களிடம் குறையிருந்தாலும் மற்றவர்களிடம் விட்டுக்கொடுக்காத பெருந்தன்மை:
“ஆயிரம் உண்டிங்கு ஜாதிஎனில் அன்னியர் வந்து புகல்என்ன நீதி? ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?”
“ஜாதி மதங்களைப்பாரோம் இத்தேசத்தில் ஜன்மம் எய்தினராயின் வேதியராயினும்
ஒன்றே அன்றி வேறு குலத்தவராயினும் ஒன்றே, “வந்தே மாதரம் என்போம்,” என்றார்.
- சான்றோர்களுக்கு உரிய மரியாதை செய்து பெருமைப் படுத்துதல்:
கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசுந்தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்று பண்டைய தமிழ்ப் புலவர் பெருமக்களையும் வீரசிவாஜி, நிவேதிதா அம்மையார், சுவாமிஅபேதானந்தா, ரவிவர்மா, குருகோவிந்தர், தாயுமானவர், தமிழ்த்தாத்தா உ.வே.சுவாமிநாத ஐயர், திலகர், காந்தி போன்ற பல சான்றோர்களையும் பெருமைப்படுத்திச் சிறப்பித்துப்பாடினார்.
இவ்வாறாக நாட்டின், பாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி, சமூகநலன், வெளியுறவுக்கொள்கை, மக்களின் முன்னேற்றம், மக்களை உயிராக நேசித்தல், பாரம்பரியப்பெருமை என்று ஒவ்வொன்றையும் ஆழ்ந்து சிந்தித்து, ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும் தம் எழுச்சி மிக்க பாடல்களில் உணர்ச்சி பொங்கப் பதிந்து, தலைவனாகும் இத்தகுதிகள் குறைவிலாது அவரிடமும் இருந்தன என்பதை பாரதி சந்தேகமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால் தான் வையத்தலைமை அருள்வாய் என்று பராசக்தியிடம் கேட்கத்துணிந்தார் போலும்.
இன்றைய பாரதப்பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் பாரதி கூறிய தலைமைப்பண்புகள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, தனது ஒவ்வொரு செயல்களாலும் அவற்றை மெய்ப்பித்துக் காட்டி பாரதநாடே வையத்தலைமைக்கு ஏற்றது என்பதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.
பாதுகாப்பு:
- ” தீரத்திலே படை வீரத்திலே… காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக் கடலினிலே உயர் நாடு” பாரதம் என்பதை மெய்ப்பிப்பது போல் வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக நமது முப்படைகளின் படை, ஆயுதங்கள், கட்டமைப்பு வசதிகள் எல்லாமே பலமடங்கு பலப்படுத்தப்பட்டு பாரதத்தின் நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்கத் துடிக்கும் எதிரி நாடுகளை எந்த சமயத்திலும் எதிர்கொள்ளத் தயார்நிலையில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது;
- “வெற்றிகொள்ளும் வீரமறவு” அருளவும் “வயிரமுடைய நெஞ்சு வேணும்” என்றும் பாரதி கேட்ட்தைப் பிரதிபலிப்பது போல், நமது எல்லைக்குள் ஊடுருவி “யூரி” என்ற இடத்தில் 19 படைவீர்ர்களைக் கொன்ற எதிரி நாட்டின் எல்லைக்குள் சென்று 4 தீவிதவாதத் தளங்களை துல்லியமாக அழித்து மீண்டது பாரதத்தின் “சிறப்பு கமேண்டோ சேனை”. அதேபோல், ஆக்கிரமிப்பு எல்லையில் சீன ராணுவத்தினர் நம் வீர்ர்களைத் தாக்கிக் கொன்றபோது திருப்பித்தாக்கி எதிரிகளைக் கொன்று தக்க பதிலடி கொடுத்தது பாரதம்.
வெளியுறவுக்கொள்கைகள்:
- “பாருக்குள்ளே நல்ல நாடாக“, அண்டைநாடுகள் மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்துடனும் சுமுகமான உறவுகளை வளர்த்துக்கொண்டு பாரதத்தின் நிலைப்பாட்டை இன்று மற்ற நாடுகள் எதிர்நோக்கும் அளவிற்கு பெருமை படைத்துக்கொண்டிருக்கிறது பாரதம். ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதற்கு உக்ரைன் நாடு, பாரதப்பிரதமரின் தலையீட்டை எதிர்பார்த்த செய்தியும், ஜி20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை பாரதப்பிரதமர் ஏற்றதும் பாரதத்தின் இன்றைய உன்னத நிலையைப் பறைசாற்றுகின்றன; இது தவிர முன்னர் நம்மை அடிமை செய்து ஆண்ட ஆங்கிலேயரை ஆட்சிசெய்ய இங்கிலாந்து நாட்டில் சமீபத்தில் இந்திய வம்சாவளியினரை பிரதமராகத் தேர்வு செய்துள்ள நிலையும், அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் முன்னோடி நிறுவனங்களெல்லாம் தலைமைக்கு இந்தியர்களைக் கொண்டிருப்பதும் இந்தியாவின் இன்றைய உன்னத நிலையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
- வளர்ந்த நாடுகள் கொடுக்கும் பலவித நெருக்கடிகளை “இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும்… அச்சமென்பதில்லையே,” என்று தைரியத்துடனும் சாமர்த்தியத்துடனும் பாரதம் இன்று எதிர்கொண்டு வருகிறது;
- “சொந்த சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்காராய்“, உலக நாடுகள் கரோனா சமயத்தில் திணறிக் கொண்டிருந்தபோது, “நெஞ்சில் ஈரத்திலே உபகாரத்திலே ..உயர் நாடு“ என்று பாரதம், நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு பெருந்தன்மையாக மருந்துகள் வழங்கி பாராட்டப்பெற்றது;
- “தனியொரு மனிதனுக்கு உணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்பதற்கேற்ப ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற அண்டை நாடுகளுக்கு உணவுப்பொருட்கள், நிதியுதவி (கடந்த 4 வருடங்களில் சுமார் ரூ21000 கோடி) என்று பல பேருதவிகளை அளித்து வருகிறது.
- நடந்துவரும் ரஷ்யா-உக்ரைன் போர் நேரத்தில் உக்ரைனில் பரிதவித்த நம்நாட்டு மாணவர்கள் 20,000 பேரை இந்தியா நேர்த்தியாகக் காப்பாற்றிக் கொண்டுவர முடிந்தது.
பொருளாதாரம்:
- “ஆயுதம் செய்வோம்” என்று பாரதி அன்றே சொன்னதுபோல் இன்று போர்க்கருவிகள், ஏவுகணைகள், ராக்கெட் செலுட்தும் ஏவுகணைகள், சிறிய ஹெலிகாப்டர்கள், காக்கும் படகுகள், ராடார் கண்டுபிடிப்பான் முதலியன இந்தியாவில் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது (இந்த வருடம் இதுவரை ரூ.17000கோடி தாண்டியாயிற்று; 2014இல் ரூ1000 கோடி மட்டுமே); மட்டுமின்றி, இந்தியாவில் செய்யப்படும் தேஜஸ் போர் விமானங்களை வாங்க மலேசியநாடு விருப்பம் தெரிவித்துள்ளது..
- “திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து” வாழ்வோம். “ஓயுதல் செய்யோம், தலை சாயுதல் செய்யோம்“ என்று, அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்ய குறுந்தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ஏற்படுத்திய “உள்நாட்டு உற்பத்தி” திட்டம் (ஆத்ம நிர்பர்) சிறப்பாகச் செயல்படுகிறது. கரோனா பேரிடர் காலத்தில் அதனால் பாரதத்திற்கு மிகுந்த நன்மை உண்டாயிற்று..
- பொருளாதார திட்டங்களை தீர்க்க தரிசனத்துடன் தீட்டி இப்போது பல நாடுகளும் சந்தித்துவரும் பொருளாதார மந்தநிலையிலும் ஜிடிபி வளர்ச்சியில் உலக நாடுகள் அனைத்தையும் விட பாரதம் அதிக வளர்ச்சி காண்பித்துக்கொண்டு இருக்கிறது. (உலக வங்கியின் கணிப்பு, நடப்பு ஆண்டிற்கு9%)
- எந்த நாட்டிலும் இல்லாத அளவில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகள் அனைத்து மக்களாலும் பின்பற்றச்செய்து சரித்திரம் படைத்திருக்கிறது.
- வணிகத்திற்கான இணக்கத்தை எளிதாக்குவதற்காக நாடு முழுமைக்கும் ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திட்டம் அமல்படுத்தப்பட்டு அரசின் வருவாய் இருமடங்காக (ரூ.14.8 டிரில்லியன் மார்ச் 2022; ரூ.7.2 ட்ரில்லியன் 2017-18-அறிமுகம் செய்த வருடம்) ஆக உயர வகை செய்திருக்கிறது.
- அரசின் மானியங்கள் மற்றும் உதவிகள் மக்களை நேராகச்சென்றடைய வகை செய்தது.
கல்வி:
- பன்முக வளர்ச்சியை நோக்கமாகக்கொண்டு 21வது நூற்றாண்டின் முதல் பாரதக் கல்விச் சீர்திருத்தமாக தேசியக் கல்விக்கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. மிக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சீர்திருத்தம் இது.
- 2014க்குப்பின் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் பதினொன்றை புதிதாக ஏற்படுத்தி அவை இன்று மொத்தம் -19- ஆக உயர்ந்துள்ளது; அதேபோல் ஐஐடி (23), ஐஐஎம்(20), பல்கலைக்கழகங்கள்(1047), கல்லூரிகள்(42,324) எல்லாமும் வெகுவாக வளர்ச்சி அடைந்துள்ளன. உலகஅளவிலான தரவரிசைக்கு 71 பாரதப் பல்கலைகழகங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.
சுத்தம் சுகாதாரம்:
- “மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?” .. நோய்களில்.. பாரதர் புழுக்கள் போல் துஞ்சக் கண்ணாற் கண்டும் சோம்பிக் கிடப்பதோ?” என்று கரோனா பேரிடருக்கு உலகெங்குமே மருந்து கண்டுபிடித்திராத நிலையில் உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் மூலம் நம் நாட்டிலேயே மருந்து உற்பத்தி பண்ண வைத்து அதனை நம் நாட்டின் 130 கோடி மக்களுக்கும் (தற்போது 3 டோஸ்களும்) கணினிப்பதிவு மூலம் முறையாக வழங்க வழி வகை செய்தது மட்டுமல்லாமல், முக கவசம், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், கூடுதல் படுக்கைகள், கூடுதல் பேரிடர் மருத்துவ மையங்கள் போன்ற அனைத்து வசதிகளும் அளித்து, உலகெங்குமே இல்லாத வகையில் அடித்தள மக்கள் அனைவருக்குமே இலவசமாகக் கூடுதல் உணவுதானியங்கள் கிடைக்கச் செய்து பாரதத்தின் வல்லமையை உலகிற்கு உணர்த்திய பேராண்மையாகட்டும்;
- அதே சமயம் “இழிசெல்வத் தேட்டில் விருப்புங் கொண்ட சிறுமையராய்” கரோனாவையும் ஒரு வாய்ப்பாக்க்கொண்டு
- “வெளிநாட்டு மாஃபியா மருந்துக்கம்பனிகள் பாரதத்திற்குள் ஊடுருவி உள்நாட்டு மருந்து தயாரிப்பாளர்களை கபளீகரம் பண்ணும் முகத்தான் தமது மருந்துகளைப் பயன்படுத்த பாரதத்தை இணங்கவைக்க முயன்றதை சாதுர்யமாக முறியடித்தது.
- உள்நாட்டு மருந்து மாஃபியாக்களிடமிருந்து மக்களைக் காக்க மிகக்குறைந்த விலையில் உயிர் காக்கும் மருந்துகள் எல்லா மக்களுக்கும் மத்திய அரசின் மருத்துவ மையங்கள் மூலம் கிடைக்கச்செய்தது;
- அடித்தள மக்களனைவரின் சுகாதாரத்தைக் காக்க ரூ.5 லட்சம் வரை ஆயுள் காப்பீட்டை உறுதி செய்து திட்டம் கொண்டுவந்தது;
- “ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில் இழிவு கொண்ட மனிதனென்று இந்தியாவில் இல்லையே“ என்றபடி, தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுகாதாரத்தை வலியுறுத்தி, திறந்தவெளியில் மலம்கழித்தல் மற்றும் மலமள்ளலையும் ஒழித்து, கழிப்பறை கட்டிக்கொடுக்கும் திட்டம் முதலான சுகாதார மேம்பாட்டுத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சுகாதார ஊழியர்களின் சுயமரியாதை காக்கச்செய்தது.
சமூக நலம்:
“சிறியரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்”
என்ற பாரதி வாக்கிற்கிணங்க:.
- வங்கி சேவைகள் அடித்தள மக்களை அடையும் வண்ணம் குறைந்தபட்ச கையிருப்பை வலியுறுத்தாத வங்கிக்கணக்குகளை துவக்கி ஏழை எளிய மக்கள் பயனடைய வகை செய்த்து.
- வசிக்க இருப்பிடமில்லாமல் நலிவடைந்த பிரிவினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்தோருக்கு குறைந்த செலவில் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் கொண்டுவந்தது (இதுவரை23 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன).
- எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புகள் பாரதத்தின் எளியோரனைவருக்கும் கிடைக்கச்செய்தது.
- மின்சாரமில்லாத கிராமமே இந்தியாவில் இல்லை என்ற நிலையை உருவாக்கி ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் கிடைக்கச் செய்தது.;
- “பெண்களறிவை வளர்த்தால் வையம் பேதைமையற்றிடுங் காணீர்!” என்பதற்கிணங்க, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம் (பேடி பசாவ், பேடி பதாவ்) திட்ட்த்தின் மூலம் பெண்ணுரிமையை நிலை நாட்டியது;
- “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்“ எனும் வகையில் முத்தலாக்கை சட்ட அங்கீகாரமற்றதாக அறிவித்தது.; கல்லூரியில் படித்த பட்டதாரி முஸ்லிம் பெண்களின் திருமணத்திற்கு பண உதவி அறிவித்தது.
- விளையாட்டில் திறமையுள்ளோரை ஊக்குவிக்கும் (கேலோ இந்தியா) திட்டம் ஏற்படுத்தியது.
- “விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்” என்று பாரதி சொன்னபடி, இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அவர்களுக்கு காப்பீட்டுத்திட்டம் ஏற்படுத்தி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.1,25,662 கோடி காப்பீட்டுத்தொகை வழங்கப்படுள்ளது;
- மற்றும் “உண்ணக் காய்கனி தந்திடுவீரே உழுது நன்செய்ப் பயிரிடுவீரே! எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடுவீரே! இழையை நூற்று நல்லாடை செய்வீரே! .. மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!” என்று வருடத்திற்கு ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.6000 வீதம் சுமார் 14 கோடி விவசாயிகளுக்கு ஆதரவு தந்து வருகிறது; நாடு முழுதும் விவசாயிகளுக்கு, 22 கோடி மண்வள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன;
- பொருளாதாரத்தில் பின்னடைந்த அடித்தளத்திலுள்ள மக்களுக்கென்று 10% ஒதுக்கீட்டை உறுதி செய்தது;
- பாரம்பரியங்களைப் பாதுகாத்து, பாரதத்தின் ஆன்மீகப்பெருமைகளை மீண்டும் நிலைபெறச் செய்ய தக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது; மற்றும் ஆன்றோர்களையும் சாதனையாளர்களையும் கௌரவிப்பதில் அக்கறை காட்டுகிறது.
திரு.நரேந்திர மோதி அவர்களின் தலைமையில் பாரதம், மிகவும் திறமையோடு செயல்பட்டு, உலகநாடுகளனைத்துமே வியந்து இந்தியாவை பலவகைகளிலும் முன்னோடியாகப் பார்க்கும் சாதனை படைத்திருக்கிறது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
நிறைவாக, பாரதி குறிப்பிட்ட தலைமைப்பண்புகளில் பெரும்பாலானவை ஒரு அன்னை தன் குழந்தைகளிடம் காட்டும் கரிசனத்தைப் போன்றதும் ஆகும்.. அந்த நோக்கில் பார்த்தால் பாரதநாட்டை மட்டுமின்றி பாரதியையுமே, “பாரதத்தாய்” என்று சொல்வது மிகையாகாது!
திரு.ராமசுப்ரமணியன்.