பாரத ஸ்டார்ட் அப் செயற்கைக் கோள்கள்

டெல்லியில் நடைபெற்ற இந்திய விண்வெளி கூட்டமைப்பின் முதல் ஆண்டு மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், “விண்வெளித்துறையில் ஏற்பட்ட சீர்திருத்தங்கள் மூலம் புத்தாக்க ஆதாரத்துடன் கூடிய பல ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றன. பாரத ஸ்டார்ட் அப்கள் விரைவில் செயற்கைக் கோள், செயற்கைக் கோள்களை குழுவாக விண்ணில் அனுப்பும் திட்டங்களை தொடங்கும். பாரத இளம் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆற்றல் மற்றும் புத்தம் புதிய சிந்தனைகள், நம் நாட்டின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருமாற்றி வருகிறது. விண்வெளித் துறையி்ல் ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்களை புத்தாக்க நடவடிக்கையில் தனியார் துறையினருக்கு சுதந்திரம் வழங்குவது, சம்பந்தப்பட்ட பணிகளை அரசு இயந்திரம் எளிமைப்படுத்துவது, வருங்காலத்திற்கு தயாராகும் வகையில், இளம் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது மற்றும் தனி மனித வளர்ச்சிக்கு ஆதாரமாக விண்வெளித்துறையை பயன்படுத்துவது போன்றவற்றின் அடிப்படையில் எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். இந்திய விண்வெளிக் கூட்டமைப்பு, தற்சார்பு இந்தியா என்ற நோக்கத்தில் புதிய தொழில்நுட்ப வளர்ச்சி, அது தொடர்புடைய முதலீடுகளையும் கொண்டு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வழிகளில் ஈடுபட்டு வருகிறது.   தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய விண்வெளிக் கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்திய விண்வெளிக் கூட்டமைப்பு அரசின் முக்கிய முன்னெடுப்புகளை ஆதரித்து செயல்படுவதில் முக்கிய பங்காற்றுகிறது. நம் நாட்டில் இஸ்ரோவின் சாதனைகள் மூலம் உலக அளவில் அங்கீகாரத்தையும், புகழையும் பெற்றுள்ளது” என தெரிவித்தார்.