பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பதவியேற்றது முதல் நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார். காசியாபாத்தில் உள்ள ஹெச்.ஆர்.ஐ.டி குழும நிறுவனங்களின் மாணவர்கள் இடையே உரையாற்றிய அவர், “நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டு கால வரலாற்றில் பாரத இளைஞர்களுக்கு இப்போது போல அதிக அளவிலான வாய்ப்புகள் இதற்கு முன்பு எப்போதும் கிடைத்ததில்லை. பாரதம் ஒருபோதும் ஏழை நாடாக இருந்ததில்லை. இதற்கு முன்பிருந்த தலைவர்கள் அதனை ஏழை நாடாக ஆக்கி விட்டனர். பழைய பாரதத்தில் ஊழல், பாகுபாடு போன்றவை மலிந்திருந்தன. ஆனால் தற்போதைய புதிய பாரதத்தில் வாய்ப்புகள் அதிகரித்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மத்திய அரசு பல்வேறு மக்கள் நலக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் புதிய பாரத யுகத்தை உருவாக்கியுள்ளது. முந்தைய செயலிழந்த ஜனநாயகத்திற்குப் பதிலாக அரசு நிர்வாகம் செயல்படும் ஜனநாயகமாக மாற்றியுள்ளது. அதிகபட்ச நிர்வாகம் தற்போது நடைபெறுகிறது” என்று தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் பாரதத்தின் முன்னேற்றம் குறித்த சில தரவுகளை எடுத்துரைத்த அமைச்சர், “தொழில்நுட்பமும், திறன்களும் இளம் பாரதத்தின் எதிர்காலத்தை மாற்றுவதற்கான இரண்டு முக்கியமான தூண்கள். பாரதத்தின் இந்த 10 ஆண்டுகளில் நாட்டின் முன்னேற்றத்தை இளைஞர்கள் வழிநடத்துகின்றனர். அவர்களது கடின உழைப்பின் மூலம் வெற்றியை அவர்கள் அடைந்துள்ளனர். 110 யுனிகார்ன் நிறுவனங்கள் உட்பட 90,000க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் தற்போது பாரதத்தில் இயங்குகின்றன” என்றார். இளைஞர்களுக்கு ஊக்கமூட்டும் விதமாக, கடந்த 18 மாதங்களில் அமைச்சர் நாடு முழுவதும் 43 கல்வி நிறுவனங்களுக்கு பயணம் செய்து இளைஞர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.