ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இணையதளத்தில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021ம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவ செலவினங்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதன்படி அமெரிக்காவின் ராணுவ செலவு ரூ. 63.4 லட்சம் கோடியாகவும் சீனாவின் ராணுவ செலவு ரூ. 23.23 லட்சம் கோடியாகவும் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாரதம் உள்ளது. பாரதத்தின் ராணுவ செலவு ரூ. 6.06 லட்சம் கோடியாக உள்ளது. சர்வதேச அளவில் ராணுவத்துக்கு செலவு செய்வதில் பாரதம் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 2017 முதல் 2021 வரையிலான ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 33.97 சதவீதம் முதல் 41.60 சதவீதம் அளவுக்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பாரதத்தில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று மக்களவையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.