டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2018 மற்றும் 19ம் ஆண்டுக்கான தேசிய சுற்றுலா விருதை வழங்கி பேசிய குடியரசுத் துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், “சுற்றுலாவுக்கான சொர்க்கம் நமது பாரதம். மக்கள் சர்வதேச சுற்றுலா தலங்களை காண்பதற்கு முன்பாக முதலில் உள்நாட்டு சுற்றுலா இடங்களை காணவேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ சுற்றுலா துறையில் பாரதம் மகத்துவமான பங்களிப்ப கொண்டுள்ளது. நமது பழமையான முறைகளான ஆயுர்வேதம் மற்றும் யோகா, உலக அளவில் பிரபலமடைந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான சுற்றுலா இடங்கள் நமது வரலாறு, நாட்டுப்புற கலைகள் மற்றும் பண்டைய நூல்களுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளன. பாரதம் இயற்கையின் கொடைகளைக்கொண்ட இயற்கையான இடமாகும். இமயமலையின் பனி மூடிய சிகரங்கள் முதல் ஒடிசாவின் மணல் கடற்கரைகள் வரை, ராஜஸ்தானின் பாலைவனங்கள் முதல் சுந்தர்பான்ஸில் உள்ள டெல்டா பகுதிகள் வரை, அசாமின் தேயிலை தோட்டங்கள் முதல் கேரளாவின் உப்பங்கழிகள் வரை இவை பரவசமானது, நம்மை பிரமிக்க வைக்கிறது. நாட்டின் வளமான கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம், பல்வேறு சூழலியல், நிலப்பரப்புகள் மற்றும் நாடு முழுவதும் பரவியுள்ள இயற்கை அழகின் இடங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாரதத்தின் சுற்றுலா பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கான இயக்கியாக மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. உலக மக்கள் தங்களது பல தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு பயணத்தை மேற்கொள்ளக்கூடிய ஒரே நாடு பாரதம் மட்டுமே” என கூறினார். இந்நிகழ்ச்சியில், பாரத சுற்றுலா புள்ளியியல் 2022 என்ற புத்தகத்தையும் GoBeyond:75 Experiences of North India என்ற மின் புத்தகத்தையும் குடியரசுத் துணைத்தலைவர் வெளியிட்டார்.