52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் கோலாகலமாக தொடங்கியது. இதன் துவக்க நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசுகையில், ‘திரைக்கதை உருவாக்கத்தின் மையமாக பாரதத்தை மாற்ற முயல்கிறோம். இதற்காக பிராந்திய அளவில் திரைப்பட விழாக்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். திரைப்பட தயாரிப்புக்கு பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நடக்கும் இடமாகவும் பாரதத்தை மாற்றுவதில் உறுதியாக உள்ளோம். திரைப்படம், பொழுதுபோக்கு துறைகள் டிஜிட்டல் யுகத்துக்கு சென்றுள்ளதால், இதில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இங்கு தொழில்நுட்ப திறமைசாலிகளை அதிகம். உலகனைத்தும் ஒரே குடும்பம் என்ற கருத்தை உடைய தேசம் இது. சினிமா உலகளாவிய மொழியை பேசுவதால், பிறரை ஈர்க்கும் திறனில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 52வது இந்திய சர்வதே திரைப்பட விழாவில் ஓ.டி.டி தளங்களும் பங்குபெறுகின்றன. பிரிக்ஸ் நாடுகளின் திரைப்பட விழாவும் முதல் முறையாக நடத்தப்படுகிறது’ என கூறினார். இந்நிகழ்ச்சியில், நடிகை ஹேம மாலினிக்கு, இந்தாண்டுக்கான இந்திய திரைப்பட ஆளுமை விருது, பிரபல பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு விருது, ஸ்டீவன் சபோ மற்றும் மார்ட்டின் ஸ்கார்செசே ஆகியோருக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்சியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், ஆளுநர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.