பதிலடி கொடுக்க பாரதம் தயார்

பாரதம் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாரதம் சீனா இடையே மோதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரகம், இந்த ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘பாரதமும் சீனாவும் இருதரப்பு எல்லைப் பேச்சுக்களில் ஈடுபட்டு எல்லைப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொண்டாலும், 2020ம் ஆண்டில் அதன் எல்லையில் நடைபெற்ற மோதலை அடுத்து இந்த உறவுகள் கடினமாக இருக்கும். சர்ச்சைக்குரிய எல்லையில் பாரதம் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் விரிவுபடுத்தப்பட்ட ராணுவ நிலைப்பாடுகள், இரண்டு அணுசக்தி சக்திகளுக்கு இடையே ஆயுத மோதலின் அபாயத்தை உயர்த்துகிறது. இது அமெரிக்க நலன்களுக்கும் நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. பாரதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நெருக்கடிகள் கவலைக்குரியவை. ஏனெனில் இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல்போக்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்ததைத் தொடர்ந்து அவை தங்கள் உறவில் தற்போதைய அமைதியை வலுப்படுத்த முனைகின்றன. இருப்பினும், பாரதத்துக்கு எதிரான பயங்கரவாதக் குழுக்களை ஆதரிப்பதில் பாகிஸ்தானுக்கு நீண்ட வரலாறு உண்டு. எனினும், பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய வலுவான தலைமையின் கீழ், பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு ராணுவ பலத்துடன் தக்க பதிலடி கொடுப்பதற்கு பாரதம் முன்னெப்போதையும் விட அதிக வலுவாகவும் தயாராகவும் உள்ளது. காஷ்மீர் விவகாரம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்க முடியாது என்றும், பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை பாகிஸ்தான் ஏற்படுத்த வேண்டும் என்றும் பாரதம் தொடர்ந்து கூறி வருகிறது’ என கூறப்பட்டு உள்ளது.