உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யு.டி.ஓ) அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ‘யாருடைய நெருக்குதலுக்கும் இந்தியா அடிபணியாது, தன்னுடைய நாட்டு மக்களின் நலனை விட்டுத்தராது, தன்னிறைவு அடையும் லட்சியத்திலிருந்து பின்வாங்காது. உலகமெங்கும் உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஏழை, நடுத்தரக் குடும்ப மக்கள் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் ஒவ்வொரு நாடும் எவ்வளவு உணவுப் பொருள்களைக் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வளர்ந்த நாடுகளின் நிபந்தனைப்படி அமல்படுத்த முடியாது. வளரும் மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதில் பாரதம் அக்கறை கொண்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பரவியபோது உலகின் பெரும்பாலான நாடுகளுக்குத் தடுப்பூசி மருந்துகள் கிடைக்கவில்லை. புதிய தடுப்பூசி மட்டுமல்லாமல் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த உயிர்காக்கும் மருந்துகள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்குக்கூட பற்றாக்குறை ஏற்பட்டது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட உலக அமைப்புகளால் உதவ முடியவில்லை. உலகின் தொழில்வள நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களின் நலனுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்துவிட்டு பிற நாடுகளைப் புறக்கணித்தன. தடுப்பூசிகளிலும் வணிக நோக்கத்தைப் புகுத்தி லாபம் சம்பாதிக்கப் பார்த்தன. இதனால் ஏழை மக்களின் சுகாதார நலனைப் பாதுகாக்கும் கடமையிலிருந்து உலக வர்த்தக அமைப்பு தவறிவிட்டது. ‘ஒரே உலகம் ஒரே உடல் நலம்’ என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். உலக நாடுகளுக்கு அவசரமாகத் தேவைப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை பாரதம் தான் கோடிக்கணக்கில் தயாரித்து விரைவாக அனுப்பியது. பணக்கார நாடுகள் இதில் தாங்கள் செய்தது சரியா என்று ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்” என்றார்.