பக்தியை தவிர்த்த மொழிபெயர்ப்பு

டெல்லி லோதி தோட்டத்தில் உள்ள டெல்லி தமிழ் கல்விக்கழக பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்து பேசுகையில், “திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். திருவள்ளுவர் நமது பிரபஞ்சத்தின் ஒரு விடிவெள்ளி. ஆனால், தற்போது திருக்குறள் என்பது ஒரு கருத்துரை, வாழ்வியல் அடங்கிய ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டதாகக் கருதுகிறேன், ஆனால் திருக்குறள் என்பது அதற்கு மேலானது. திருக்குறள் என்பது பக்தி, வாழ்வியல், பிரபஞ்சம் என அனைத்தையும் உள்ளடக்கியது. தமிழக ஆளுநராக நான் பதவியேற்ற பின்னர் எனக்குத் திருக்குறள் புத்தகம் அதிக அளவில் பரிசாகக் கிடைத்தது. அதில் பெரும்பாலானது ஜி.யு.போப் என்பவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பிலிருந்து பக்தி என்ற கண்ணோட்டம் நீக்கப்பட்டுள்ளது. அனைத்துக்கும் பொதுவாகிய ஆதிபகவன் என்பதை மொழிபெயர்ப்புகளில் தவிர்த்துள்ளனர். பக்தி என்பதை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் திருக்குறளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. மிஷனரியாக பாரதத்துக்கு வந்த ஜி.யு போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு; ஆன்மா இல்லாத சவம் போல உள்ளது. தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் மிக மிகப் பழமையானது. 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் யோக கலையின் முக்கியத்துவத்தைத் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேயர்கள் பாரதத்தை ஒரு சந்தையாகவும், கலாச்சாரம் இல்லாத நாடாகக் காட்ட முயன்றனர். ஆனால், பாரதம் அவ்வாறு இல்லை, அது கலாச்சாரம் நிறைந்த, பண்பட்ட சமூகமாக அப்போதே இருந்தது. மொழிபெயர்ப்பாளர்களின் உள்நோக்கம் கொண்ட மொழிபெயர்ப்பை விடுத்து உண்மையான பொருட்களை வெளிக்கொணர வேண்டும். மாணவர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும், எக்காரணத்தைக் கொண்டும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது. தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது, மாறாகத் தோல்வியிலிருந்து வெளிவரத் தன்னம்பிக்கையுடன் கடுமையாக உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.