அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி) மற்றும் டிரிப்டா டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அஞ்சல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மத்திய இணையமைச்சர் தேவுசின் சௌஹான் முன்னிலையில் கையெழுத்திடப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ‘பாரத் இ மார்ட்’ என்ற போர்ட்டலை செயல்படுத்த உதவுகிறது. இது வர்த்தகர்களிடத்திலிருந்து சரக்குகளை எடுத்துச் சென்று, நாடு முழுவதும் மக்களின் வீட்டிலேயே டெலிவரி செய்வதை உறுதி செய்யும். இது சி.ஏ.ஐ.டி உடன் தொடர்புடைய எட்டு கோடி வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “சி.ஏ.ஐ.டி மற்றும் பாரத் இ மார்ட் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாட்டில் உள்ள சிறு வணிகர்களுக்குத் தேவையான போக்குவரத்து ஆதரவை வழங்குவதோடு, இது அவர்களின் வணிகங்களையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும். பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப காலப்போக்கில் தபால் துறை தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது. பெண்கள் அதிகாரமளிப்பதற்காக பிரதமர் மோடி அயராது உழைத்து வருகிறார். இந்தக் கனவை நனவாக்குவதில் அஞ்சல் துறை முக்கியப் பங்காற்றி வருகிறது. செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் அரசின் சிறந்த செயல்திட்டங்களில் ஒன்று. பெண்களின் வைப்புத்தொகைக்கு 7.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் ‘மகிளா சம்மன் பச்சத் பத்ரா’ மிகவும் பிரபலமான திட்டமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் போது அஞ்சல் துறை சிறந்த சேவையை வழங்கியது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கக்கூடிய கொள்கைகளை உருவாக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி, தபால் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். இன்றைய நிகழ்வு உட்பட, தபால் துறையின் ஒவ்வொரு கொள்கையும், செயலும் அந்த நோக்கத்திலேயே செயல்படுகிறது” என கூறினார்.