பாரத வங்கித்துறை 2023−-24 நிதியாண்டில் புதிய வரலாறு படைத்துள்ளது. வங்கித் துறையின் நிகரலாபம் நடப்பு ஆண்டில் ரூ.3 லட்சம் கோடியை முதல்முறையாக எட்டியது. இது ௩௯ சதவீத வளர்ச்சியாகும். 3 லட்சம் கோடி ரூபாய் என்பது, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் ஒட்டுமொத்த லாபத்திற்குச் சமமானதாகும். அதிக லாபம் ஈட்டும் துறையான தகவல் தொழில்நுட்பத் துறையின் சென்ற ஆண்டு லாபம் ரூபாய் 1.1 லட்சம் கோடியைப் போல இது ஏறத்தாழ மூன்று மடங்கு வங்கித் துறையின் நிகர லாபம்.
பொதுத்துறை வங்கிகள் நிதியாண்டு 2017-−18ல் மிகப் பெரும் இழப்பைச் (ரூ.85,390 கோடி) சந்தித்திருந்தன. காரணம், முந்தைய மன்மோஹன் சிங் அரசு வழங்கிய கடன்கள் வாராக்கடன்களாகி அவற்றுக்கு ஈட்டிய லாபத்திலிருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டி வந்தது. அந்த நிலையிருந்து விரைவாக வெளியேறி, நம் நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகள் இணைந்து 2022-−23ல் ரூ.1,04,649 கோடி நிகர லாபம் ஈட்டின. மேலும் தொடர்ந்து முன்னேறி இன்று வரலாறு படைத்துள்ளது. சும்மா வந்து விடவில்லை இந்த முன்னேற்றம்.
பாரத அரசின் தெளிவான கொள்கை முடிவுகள், வங்கித்துறையை சுதந்திரமாய்ச் செயல் பட விடுதல், தனக்கு வேண்டியவர்களுக்கு போன் செய்து கடன் கொடுக்க நிர்ப்பந்திக்கும் யுபிஏ அரசின் போக்கை முற்றிலும் கைவிட்டது என்று பலவற்றைச் சொல்லலாம்.
மிக முக்கியமாக, வாராக் கடன்கள் விஷயத்தில் நம் நிதி அமைச்சகத்தின் – ரிசர்வ் வங்கியின் கண்ணோட்டத்தையும் அணுகு முறையையும் நடைமுறைகளையும் உற்று நோக்கும் நிபுணர்கள், நான்கு சிறப்பான முன்னெடுப்புகளைப் பட்டியலிடுகின்றனர்; அவற்றை 4R என்று குறிப்பிடுகின்றனர்.
அவையாவன: வாராக்கடன்களை (NPA) வெளிப்படையாக அங்கீகரித்தல், தீர்மானமும் மீட்பும், பொதுத்துறை வங்கிகளை மறுமூலதனமாக்குதல் மற்றும் நிதிச் சூழல் அமைப்பில் சீர்திருத்தங்கள். இவை எல்லாம் வாராக்கடன் சுமை குறைந்து வங்கித்துறை மீண்டும் வலிமையுடன் எழ உதவின.
புரொவிஷன் செய்யப்பட்ட கடன்களில் பெருமளவு வசூல் செய்ய முடிந்தது. கார்ப்பரேட்டுகளுக்கு கடன்கள் முறையான மதிப்பீட்டிற்குப் பிறகு தகுதிகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டதால் இன்று வாராக் கடன்கள் அதிகரிக்கும் வேகம் பெருமளவு மட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
அதனையொட்டி ரிசர்வ் வங்கி, ரூபாய் 2 லட்சம் கோடியை ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. மீண்டும் பாரத நாட்டின் பல்துறை வளர்ச்சிகளுக்கு தண்ணீரும் உரமுமாகத் தானே, இவை பயன்படப் போகிறது!
(கட்டுரையாளர் முன்னாள் வங்கித் துறை அதிகாரி -நிதித் துறை மென்பொருள் ஆலோசகர்)