போரிஸ் வருகையால் பாரதத்திற்கு பலன்

இரண்டு நாள் அரசு முறை பயணமாக  பாரதம் வந்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், முதல் நாள் பயணமாக குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். அகமதாபாத்தில் தொழிலதிபர் கவுதம் அதானியை சந்தித்துப் பேசினார். அப்போது, சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றில், அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் டெல்லி சென்ற அவர், ராஜ்காட் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாட்டு வர்த்தக, பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புகள், உலகளாவிய பிரச்சனைகள், தூதரக உறவுகள், உக்ரைன் போர்நிறுத்தம் போன்ற பல விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட்டன. போரிஸ் ஜான்சன் வருகையால், பிரிட்டன் நிறுவனங்கள் பாரதத்தில் அதிக அளவில் முதலீடு செய்வது, பாரத தேசத்தவர்களுக்கு பிரிட்டன் விசா, தடையற்ற ஒப்பந்தம், சுற்றுச்சூழல், பாரதத்தின் ஹைட்ரஜன் மிஷனில் பிரிட்டன் பங்கெடுப்பு, பாதுகாப்புத் துறை, வர்த்தகம், காலநிலை மற்றும் எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு இணைந்து வளர முடியும்.