பா.ஜ.க, கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பாஸ்மாண்டா முஸ்லிம் சமூகத்தின் முக்கிய உறுப்பினர்களுடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. பாஸ்மாண்டா முஸ்லிம்களுடன் அக்கட்சி நடத்தும் முதல் சந்திப்பு இது. இந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடி, பாஸ்மாண்டா முஸ்லீம்கள் உட்பட பிற மதக் குழுக்களிடையே ஒதுக்கப்பட்ட பிரிவினரை அணுகுவதன் மூலம் புதிய சமூக சமன்பாடுகளை ஆராயத் தொடங்குமாறு கட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ‘பாஸ்மாண்டா புத்திஜீவிகள் சம்மேளன்’ என்று அழைக்கப்படும் இக்கூட்டத்தில், உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். உ.பி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி, ஜம்மு காஷ்மீரில் இருந்து புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பியும் குஜ்ஜார் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவருமான குலாம் அலி கட்டானா உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் பேசிய பிரஜேஷ் பதக், “முஸ்லிம்களை மதச்சார்பற்ற கட்சிகள் என்றழைக்கப்படும் கட்சிகள் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகின்றன. இந்த கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை கைப்பற்றி ஆட்சிக்கு வந்தன. ஆனால் அவர்களுக்கு அவை உரிமைகளை வழங்கவில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் இன்று மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். பா.ஜ.கவே, முஸ்லிம்களின் உண்மையான நலம் விரும்பி. அவர்களை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கு குறிப்பிடத்தக்க முயற்சிகளை பா.ஜ.க மேற்கொண்டு வருவகிறது. இதற்காக, முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் பல திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது” என்று கூறினார். முஸ்லிம்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து பா.ஜ.கவைப் போல் வேறு எந்தக் கட்சியும் கவலைப்படவில்லை. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் முஸ்லீம் சமூகத்திற்கு தரமான கல்வியை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்துகிறார்” என்று டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறினார்.